விவசாயிகளைக் குற்றவாளிகள் போல் நடத்துவதா? ‘பாரத ரத்னா’ விருதாளர் மகள் ஆவேசம்!
போராடி வரும் விவசாயிகளைக் குற்றவாளிகளைப்போல நடத்தக் கூடாது என்று மதுரா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் உடனான விவசாயிகளின் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, விவசாயிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் டெல்லி நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டனர்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராத அமைப்பு) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
விவசாயிகளின் கோரிக்கைகள் என்பது குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட ரீதியிலான உத்தரவாதம் (எம்எஸ்பி). இதைத்தான் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரை செய்தது. அதை அமல்படுத்துதல் வேண்டும் என்று கூறியது.

அதைப்போல் விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அந்த கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இவை இரண்டு போக விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் சில ஆண்டுகள் முன் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறை பதிவு செய்திருந்த பல வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் தரப்பு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

மேலும் லக்கிம்பூர் கெரி வன்முறை, நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013 மறுசீரமைப்பு செய்தல், உலக வர்த்தக அமைப்பிலிருந்து விலகுதல், முந்தைய போராட்டங்களில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசிடம் விவசாயிகள் வைத்துள்ளனர்.
இந்த விவசாயிகள் போராட்டம் குறித்து மதுரா சுவாமிநாதன் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், நவம்பர் 2021 இல் எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கையைப் பகிர்ந்துள்ளார், அதில் மூன்று சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களை ரத்து செய்த மத்திய அரசின் முடிவு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் புகழ்பெற்ற இந்திய வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளாவார். இவர் பெங்களூருவின் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் பொருளாதார பகுப்பாய்வு பிரிவின் தலைவராக இருந்து வருகிறார்.
இந்தியாவில் பசுமைப் புரட்சியின் சிற்பி என்று பரவலாகக் கருதப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் செப்டம்பர் 2023 இல் தனது 98வது வயதில் காலமானார். அதனையொட்டி அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்திருந்தது.

இதற்கான ஒரு பாராட்டு விழா தில்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அவரது மகள் மதுரா சுவாமிநாதன், 'தனது தந்தை சுவாமிநாதனைக் கௌரவிக்க வேண்டும் என்றால், நாட்டில் உள்ள விவசாயிகளை இணைத்து அழைத்துச் செல்ல வேண்டும் ' என்று வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்வில் தொடர்ந்து பேசியவர், "பஞ்சாப் மாநில விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி அணிவகுத்து வருகின்றனர். பத்திரிகைகளில் வெளியாகி உள்ள செய்திகளின்படி, ஹரியானாவில் அவர்களுக்காகச் சிறைகள் தயார் செய்யப்படுவதாகத் தெரியவருகிறது.

அவர்களைத் தடுப்பதற்கு நிறையத் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தைத் தடுப்பதற்கான அனைத்து வகையான நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன எனத் தெரிகிறது. நான் அப்படித்தான் நம்புகிறேன். இவர்கள் அனைவரும் விவசாயிகள். அவர்கள் யாரும் குற்றவாளிகள் அல்ல" எனக் காட்டமாக மத்திய அரசை விமர்சித்திருக்கிறார்.
மேலும் அவர், "இந்தியாவில் இருக்கின்ற முன்னணி விஞ்ஞானிகளான உங்கள் அனைவரிடத்திலும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அன்னதாதாக்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,. அவர்களைக் குற்றவாளிகளைப் போலக் கருதக் கூடாது. போராட்டத்திற்கான தீர்வுகளை நாம் காண வேண்டும். இது எனது வேண்டுகோள்.

எம்.எஸ்.சுவாமிநாதனை நாம் தொடர்ந்து கௌரவிக்க வேண்டுமானால், எதிர்காலத்திற்காக நாம் திட்டமிடும் எந்தத் திட்டங்களோடும் விவசாயிகளை நம்முடன் சேர்த்து இட்டுச் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" எனத் தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.
முன்னாள் ஐஏஆர்ஐ இயக்குநர் ஆர் பி சிங்கின் கூற்றுப்படி, எம் எஸ் சுவாமிநாதன் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (எம்எஸ்பி) திட்டத்தை வகுத்தார். அதைச் செயல்படுத்துவதற்குத் தேவை என்ன என்பது குறித்து வலுவாக வாதிட்டு வந்தார்.

இந்த விழாவில் எம்.எஸ்.சுவாமிநாதனுடன் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்த சிங், "விவசாயத்தில் பல கொள்கைகள் உள்ளன. சுவாமிநாதன் கமிஷன், குறைந்தபட்ச ஆதரவு விலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கடுமையாகப் பரிந்துரைத்தது. ஏழை அற்ற, இயற்கை சார்ந்த விவசாயத்தால் ஊட்டச்சத்தான உணவை உறுதி செய்ய முடியும் என்று அவர் திடமாக நம்பினார்" என்றார்.












Click it and Unblock the Notifications