சென்னையில் தாறுமாறாக ஓடிய கார்.. துரத்தி பிடித்த வாகன ஓட்டிகள்.. வண்டியில் இருந்த காகிதங்களால் ஷாக்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய இன்னோவா கார் ஒன்று அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் 5 பேர் காயம் அடைந்த நிலையில், நிற்காமல் சென்ற காரை வாகன ஓட்டிகள் துரத்தி பிடித்தனர். தாறுமாறாக ஓடிய காரில் உகாண்டா நாட்டு தூதரக ஆவணங்கள் இருந்ததால், தூதரகத்திற்கும் காரில் வந்தவர்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார், அடுத்தடுத்து சாலைகளில் சென்ற வாகனங்களை இடித்து சென்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்துக்களில் சிக்கி இரண்டு குழந்தைகள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

சென்னையின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்று பூந்தமல்லி சாலை. சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் பலவும் இந்த சாலை வழியே செல்கின்றன. எப்போதும் பரபரப்பாக இந்த சாலை காணப்படும். அதிலும், காலை மற்றும் மாலை வேளைகளில் பூந்தமல்லி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
இந்த நிலையில் இன்று மாலை, கீழ்ப்பாக்கம் அருகே தாறுமாறாக ஓடிய கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த பைக், கார், ஆட்டோ என 5 க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்துக்கொண்டு சென்றது. இதில் 2 குழந்தைகள், ஒரு பெண், ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். வாகனங்களை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற காரை இரு சக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகள் துரத்தி பிடித்தனர்.
விசாரணையில் கீழ்ப்பாக்கத்தில் இருந்து சென்ட்ரலுக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. காரில் இருந்த டிரைவர் உள்பட இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து தாக்கினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள போலீசாரிடம் அவர்கள் இரண்டு பேரையும் ஒப்படைத்தனர். காரை ஓட்டி சென்றவர் மது போதையில் இருந்தாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
விபத்து ஏற்படுத்திய இன்னோவா காரில் சோதனை செய்த போது, அதில் உகாண்டா நாட்டின் தூதரக காகிதங்கள் அதிகம் இருந்தன. எனவே உகாண்டா தூதரகத்திற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? காரில் ஏதேனும் போதைப்பொருள் இருக்கிறதா? என அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications