வடகிழக்குப் பருவமழையால் 11 ஆண்டுகளுக்குப் பின் வளமாக ஓடும் காவிரி ஆறு - அதிகரித்த உபரி நீர்
11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, வடகிழக்கு பருவமழை காலத்தில் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து காணப்படுகிறது.
சென்னை: காவிரி ஆறு வற்றாத ஜீவ நதியாக வளமாக பாய்ந்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிக அளவு தண்ணீர் பாய்ந்தோடி கடலில் கலக்கிறது. இன்றைய நிலவரப்படி, பிலிகுண்டுலுவில் அளவிடப்பட்ட காவிரி நீர், அக்டோபர் 1 முதல் 118.62 ஆயிரம் மில்லியன் கன அடியாக இருந்தது. 2010 பருவமழையின் போதுதான், 107 டிஎம்சி அடியாக இருந்த மூன்று இலக்க எண்ணிக்கையைத் தாண்டியது.
தமிழகம் கர்நாடகா இடையே காவிரி தண்ணீருக்கு ஆண்டுதோறும் பஞ்சாயத்து நடைபெறுவது வழக்கம். மழை அதிகம் பொழியும் காலங்களில் கர்நாடகா அணைகளில் இருந்து பல லட்சம் கனஅடி நீர் உபரிநீராக திறந்து விடப்பட்டு கடலில் வீணாக கலக்கும். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்திலும் பல ஆயிரம் கனஅடி நீர் உபரியாக பாய்ந்தோடி கடலில் கலந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உற்பத்தியாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று பூம்புகாரில் வங்க கடலில் கலக்கிறது .

உபரிநீர் திறப்பு
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. உபரி நீர் அதிகம் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அணையின் நீர் மட்டம் 120 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது.

தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் சரியத் துவங்கியுள்ளது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 20,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 20,500 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 18,500 கன அடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுவரும் நீர் நேற்று 200 கன அடியாக இருந்த நிலையில் இன்று 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் வரத்து எவ்வளவு
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,490 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 15,280 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 64.89 கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.44 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,358 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 1,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

பிலிகுண்டு எல்லை
1974-75 முதல் கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள பிலிகுண்டுலுவில் அளவிடப்பட்ட தண்ணீர் வரத்தின் தரவை ஆய்வு செய்தால், பருவமழையின் போது ஒட்டுமொத்த வரத்து நடப்பு ஆண்டு உட்பட 10 முறை மூன்று இலக்க எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. இதுவரை, மூன்று மாத காலத்தில் அதிகபட்ச அளவு 2005ல் 167 டிஎம்சி அடியாகவும், 2000ல் 152 டிஎம்சி அடியாகவும், 1977ல் 137 டிஎம்சி அடியாகவும் இருந்தது.

47 ஆண்டுகளில் அதிக அளவு
கடந்த 47 ஆண்டுகளில் நவம்பர் மாதத்திற்கான அதிகபட்ச அளவாக, நடப்பு மாதம் காவிரி நீரை தமிழகம் 70.34 டி.எம்.சி அளவாக உள்ளது. இதற்கு முன் கடந்த 2010ஆம் ஆண்டு தண்ணீர் வரத்து 61.18 டிஎம்சி அடியாக இருந்தது. கடந்த மாதம் 48.28 டிஎம்சி அளவு தண்ணீரை தமிழகம் பெற்றுள்ளது. இது எல்லாமே உபரி நீர்தான். ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கியூபிக் என்பதன் சுருக்கமாகும். அதாவது ஒரு டிஎம்சி நீர் என்பது 100 கோடி கனஅடி நீர் ஆகும்.
Recommended Video

அதிக மழையால் கிடைத்த உபரி நீர்
ஜூன் 1ஆம் தேதி முதல் நவம்பர் 29ஆம் வரையிலான நிலவரப்படி, நடப்பு ஆண்டின் மொத்த வரத்து 210.08 டிஎம்சி அடியாக இருந்தது. இது ஆண்டின் கடந்த காலத்தில் 53.4 டிஎம்சி அடியாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கான நீர் பங்கீட்டை கோரும் போதெல்லாம் கர்நாடகா மழைப் பொழிவின் அளவு குறைந்தது பற்றியும், மழைக்காலங்களில் திறக்கப்படும் உபரி நீரின் அளவையும் தெரிவிக்கிறது. இந்த விதமான போக்கு தமிழகம் தனது உரிமையை பெறுவதற்கு இடை யூறாக உள்ளது. எனவே, மழைக் காலங்களில் காவிரியில் திறந்து விடப்படும் உபரி நீரை முறையான கணக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications