தேர்தலின் போது சிக்கிய ரூ.4 கோடி ‘ஹவாலா’ பணம்! பாஜக நிர்வாகி கைமாற்றியதாக கோர்ட்டில் சிபிசிஐடி தகவல்
சென்னை: கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய பணம் கைமாற்றப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பரபரப்பு தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பாஜக நிர்வாகி கோவர்தன், ஓட்டுநர் விக்னேஷ் மூலமாக தங்கக் கட்டிக்கு பதிலாக ரூ.97.92 லட்சத்தை கைமாற்றியது விசாரணையில் தெரியவந்ததாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது, பணப் பட்டுவாடாவை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. அப்போது சென்னை - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்லப்பட்ட தகவல் அறிந்து, பறக்கும்படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் அந்த ரயிலை நிறுத்தி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சிக்கிய கணக்கில் வராத ரூ.4 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை எடுத்து வந்திருந்த 3 பேரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளர் சதீஷ் எனத் தெரியவந்தது. விசாரணையில் ரூ.4 கோடி பணம் நெல்லை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுகளுக்காக அனுப்பப்பட்டது என்ற தகவல் வெளியானது.
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள பாஜக நிர்வாகி கோவர்த்தனனுக்கு சொந்தமான உணவகத்தில் இருந்து இந்த 4 கோடி ரூபாய் பணம் கைமாற்றப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் பாஜக பிரமுகர்கள் பலரது பெயரும் அடிபட்டது.
சென்னையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரான முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லையிலும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் உள்பட 25 பேரை சிபிசிஐடி போலீசார் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். சம்மன் அனுப்பியும் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பான புதுச்சேரியைச் சேர்ந்த எம்.பி செல்வகணபதிக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஹவாலா சூரஜ் பணத்தை கைமாற்றியது விசாரணையில் தெரியவந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் பாஜக நிர்வாகி கோவர்தன், ஓட்டுநர் விக்னேஷ் மூலமாக தங்கக் கட்டிக்கு பதிலாக ரூ.97.92 லட்சத்தை கைமாற்றியது விசாரணையில் தெரியவந்ததாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications