48 கோவில்களில் செல்போனுக்கு தடை.. விரைவில் அமல்படுத்த அரசு திட்டம்.. விளக்கிய அமைச்சர் சேகர்பாபு
சென்னை: தமிழ்நாட்டில் திருச்செந்தூர் கோவிலை தொடர்ந்து 48 முதுநிலை கோவில்களில் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கும் திட்டம் உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை உச்சியில் நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,400 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த கோவிலில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் உபயதாரர்கள் மற்றும் திருக்கோவில் நிதியுடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

அமைச்சர் சேகர்பாபு பேட்டி
இந்த கும்பாபிஷேகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அதன்பிறகு சோலைமலை முருகன் கோவிலில் உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியில் ரூ.2 கோடி மதிப்பில் வெள்ளி கதவுகள் அமைக்கும் திருப்பணிகளை தொடங்கி வைத்தனர். அதன்பிறகு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

354 கோவில்களில் கும்பாபிஷேகம்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல ஆண்டுகளாக நடைபெறாத திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 394 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 114 கோவில்கள் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு வருகிறது. ரூ.3 ஆயிரத்து 864 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு நடவடிக்கை தொடரும்.

ரோப்கார் வசதி
தமிழக பழமை வாய்ந்த மலை கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய ரோப்கார் வசதி ஏற்படுத்துவதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவிலுக்கு வரவேண்டிய ரூ.260 கோடி வாடகை பாக்கி வசூலிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் பயன்படுத்தப்படாத அணிகலன்கள் உருக்கி தங்க வைப்பீட்டு திட்டத்தில் வைத்து வருமானத்தை கோவிலுக்கு பயன்படுத்தி வருகிறோம்.

48 கோவில்களில் செல்போன் தடை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போன் தடை அமலில் இருக்கிறது. பக்தர்களின் செல்போன் பாதுகாக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுகிறது. நீதியரசர் அறிவுறுத்தலில் 48 முதுநிலை கோவில்களில் செல்போன் தடை செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலில் அந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

உடனடி நீக்கம்
இந்து அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் போலி சான்றிதழ் வழங்கி திருக்கோவில்களில் பணியில் சேர்ந்த பணியாளர்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்'' என்றார்.












Click it and Unblock the Notifications