அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - உங்க மாவட்டம் இருக்கா செக் பண்ணுங்க
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நான்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து அதிகரித்து குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று புலி அருவி, என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கடலூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி,டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 4ஆம் தேதி தீபாவாளி தினத்தன்று செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications