Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமராக வாய்ப்பு? சிறைச்சாலை டூ கோட்டை! கிங் மேக்கர் ஆகிறாரா சந்திரபாபு நாயுடு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் சந்திரபாபு நாயுடுவுக்குப் பிரதமராகும் வாய்ப்பு உருவாகி உள்ளதாகப் பல கணிப்புகள் வெளிவந்துள்ளன.

கடந்த 8 மாதங்களுக்கு முன்னால் சந்திரபாபு நாயுடு சிறைக்குச் சென்றபோது, ​ அவருக்கு ​74 வயது. அப்போது பலரும் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் அத்தியாயமும் அவரது தெலுங்கு தேசம் கட்சி கதையும் இத்துடன் முடிந்தது என்று பலரும் சொன்னார்கள்.

Andhra pradesh election result 2024 Ap assembly election result 2024 Chandrababu Naidu Jagan Mohan Reddy 2024 2024

சிறை வாழ்க்கை தந்த அனுபவம்:

இன்றைக்கு ஒரு தலைவர் வெளியிலிருந்தாலே கட்சியைக் காப்பாற்றுவது கடினம். ஏனென்றால் பாஜக போன்ற கட்சிகள் மாநிலக் கட்சிகளைச் சிதறடிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளதைக் காண முடிகிறது.

கிட்டத்தட்ட 52 நாள்கள் அவர் சிறைக் கம்பிகள் நடுவே இருந்த காலம் அவருக்கு மட்டுமல்ல; அவரது கட்சியினருக்கும் அது இருண்ட காலமாகவே மாறியிருந்தது.

நாயுடு சிறை கம்பிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தபோது ஜெகன்மோகன் ரெட்டி தனது பல்வேறு நலத்திட்டங்களால் ஆந்திர மக்கள் மனதில் மறக்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்டார் என்று நம்பிக்கை மேலெழுந்தது. அவரது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் ஏறு முகத்தில் உள்ளதாகப் பலரும் கூறினர்.

ஏறக்குறைய ஜெகன்மோகன் ரெட்டியை யாராலும் அசைக்க முடியாது என்று ஊகங்கள் முன்வைக்கப்பட்டன. அவரும் மத்திய ஆட்சியைப் பகைத்துக் கொள்ளாமல், தாமரை மேல் உள்ள தண்ணீரைப் போல் அரசியல் செய்துவந்தார்.

இன்னொரு பக்கம் நாயுடுவின் மகன் லோகேஷ் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகிய இருவரும் மக்களிடம் அனுதாப அலையைப் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால், அவர் பக்கம் பெரிய அலை வீசுவதைப் போல ஒரு தோற்றம் ஆந்திர அரசியலில் தென்படவே இல்லை. ஜெகன் போகும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அலை கடல் போல் மக்கள் அலைமோதினர்.

அப்போதுகூட ஆந்திர அரசியலுக்குள் ஒரு அமைதி புயல் மையம் கொண்டுள்ளதை யாரும் முன்கூட்டியே கணித்துக் கூறவில்லை.

ஆந்திர அரசியலைப் பொறுத்தவரை இரண்டு சமூகத்தினர்தான் அரசியல் களத்தில் அதிகார மையமாக உள்ளன. ஒன்று கம்மவா. மற்றொன்று ரெட்டி. இந்த இரண்டு சமூகத்தினரும் பெரும்பான்மையினர் இல்லை. ஆனால், பெரும்பான்மை சமுகத்தைக் கட்டுப் படுத்தும் அளவுக்குச் செல்வாக்கு பெற்றுள்ளனர்.
ஜெகன், ஆட்சிக்கு வந்த பிறகு அவர் கம்மவா வாக்கு வங்கி அரசியலை மையமாக வைத்து இயங்கவில்லை. அதேபோல் ரெட்டி வாக்கு வங்கியையும் அவர் தக்கவைத்துக் கொள்ள முயலவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

Andhra pradesh election result 2024 Ap assembly election result 2024 Chandrababu Naidu Jagan Mohan Reddy 2024 2024

என்னதான் இருந்தாலும் நாயுடு உடன் ஒப்பிடும்போது ரெட்டி இளைஞர். அரசியலில் சின்னவர். கிட்டத்தட்ட 50 வருட அரசியல் அனுபவம் கொண்டவர் சந்திரபாபு நாயுடு. மாநிலம் தாண்டி உலகம் முழுக்க உள்ள ஆந்திர மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். சுருக்கமாகச் சொன்னால், தந்திரமான அரசியல்வாதி.

சில மாதங்கள் முன்பாக சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரியில் உள்ள மத்தியச் சிறையிலிருந்து சந்தித்து விட்டு வெளியே வந்த நடிகர் பவன் கல்யாண், 'நாயுடுவுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவோம்’ என்றார்.

கூடவே, ஜெகன்மோகன் ரெட்டியையும் ஒய்எஸ்ஆர்சிபி கட்சியைத் தோற்கடிப்போம் என்றும் அதிரடியாக அறிவித்தார். அவர் அறிவித்த போது ஒரு சினிமா க்ளைமேக்ஸ் காட்சியைப் போல அதை மக்கள் உணர்ந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியை ஒருமுறை அல்ல, இருமுறை கடுமையாக விமர்சித்தவர் சந்திரபாபு நாயுடு. ஆகவே அவர் பாஜக தலைவர்களுக்கு நாயுடு பிடித்த தலைவர் அல்ல என்பதைப் பவன் கல்யாண் நன்றாகவே உணர்ந்திருந்தார்.

அதாவது 2002இல் குஜராத்தில் கோத்ரா கலவரத்திற்குப் பிறகு, குஜராத் முதல்வர் பதவியிலிருந்து நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாயுடு வலியுறுத்தி இருந்தார்.

இரண்டாவது முறையாக, 2018இல் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காததற்காக மோடியைக் குற்றம் சாட்டியதுடன் என்.டி.ஏ கூட்டணியிலிருந்து அவர் விலகினார்.

சந்திரபாபு நாயுடு மீண்டும் என்.டி.ஏ-வில் இடம் பெறவும், நரேந்திர மோடி, அமித்ஷாவுடன் இணைந்து செயல்படுவதற்குப் பவன் கல்யாண் பல முயற்சிகளை மேற்கொண்டார். அது சாதகமான சில விளைவுகளை அளித்தது.

அதன் விளைவாகப் பவன் கல்யாணும் சந்திரபாபு நாயுடுவும் கூட்டாகச் சேர்ந்து பல கூட்டங்களை நடத்தினர். போராட்டங்களில் இரண்டு பேரும் ஒன்றிணைந்து நின்றனர். தாங்கள் ஒரு வலிமையான சக்தியாக ஜெகன்மோகனுக்கு முன் உருவாகி நிற்கிறோம் என்பதை மக்களுக்கு உணர்த்தினர்.

இவை அனைத்து தொடர்ச்சியாகத் தேர்தலுக்கு முன்பாகவே நடைபெற்றன. இது இரண்டு கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய வேதியியல் மாற்றத்தை உண்டாகியது. அத்துடன் பாஜக என்று மத்தியில் பலம் கொண்ட கட்சியை தங்களின் துணைக்கு வைத்துக் கொண்டு இந்தக் காரியங்களைப் பவனும் பாபுவும் செய்தனர். அது களத்தில் நல்ல மாற்றத்திற்கான விதையை விதைத்தது.
ஒரு அரசியல்வாதியை ஒருபோதும் எழுதாதீர்கள். இது ஆந்திரப் பிரதேசத் தேர்தல் தந்த மிகப் பெரிய பாடம்.

இன்று பாஜகவுடன் கை கோர்த்து வெற்றிக் கனியைப் பறித்துள்ள சந்திரபாபு நாயுடு காங்கிரஸுடன் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்.

1975-77 ஆம் ஆண்டுகளில் அவசரநிலையின் போது இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சய் காந்தியை ஆதரித்தவர். 28 வயதில் இளம் சட்டமன்ற உறுப்பினராகவும், 1980இல் டி.அஞ்சய்யா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி பலனை அனுபவித்தவர்.

என்.டி.ராமராவின் மகள் புவனேஸ்வரியை நாயுடு திருமணம் செய்துகொண்டதால், தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு கைவசமானது. ஆகஸ்ட் 1984 இல் நாதெண்டலா பாஸ்கர் ராவ் ஆட்சியைத் தோற்கடிக்க உதவி செய்ததன் மூலம் அவர் தனது மாமனார் என்.டி.ராமாராவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார்.

அதன்பின்னர் 11 ஆண்டுகள் கழித்து சந்திரபாபு நாயுடு தானே தனது மாமனார் என்டிஆருக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பைத் திட்டமிட்டுச் செய்து ஆட்சியைக் கைப்பற்றினார்.

சரியாக 45 வயதில் முதலமைச்சரானார் நாயுடு 2004 வரை இரண்டு முறை அந்தப் பதவியிலிருந்தார். அந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் பொருளாதார சீர்திருத்தம் செய்தார். அது அவரை ஒரு பிராண்ட் ஆக மாற்றியது.

அவர் ஹைதராபாத்தை உலக தகவல் தொழில்நுட்ப வரைபடத்தில் ஒரு முக்கிய நகரமாக மாற்றிக் காட்டினார். ஆந்திரப் பிரதேசத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெயரை இதனால் அவர் பெற்றார்.

மாநில அரசியலைத் தாண்டி தேசிய அரசியலில் நாயுடுவின் பங்கு இருந்துள்ளது. முதலில் தேவே கவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளராக நாயுடு இருந்தார்.

அதன்பின்னர் ஐ.கே.குஜரால் ஆட்சியிலும் இருந்தது. 1999இல் 29 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் என்.டி.ஏ கூட்டணியில் தெலுங்கு தேசம் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
இப்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல்வராக நாயுடு மீண்டும் பதவியேற்றார். ஆந்திரப் பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தலைநகர் ஹைதராபாத்தை இழந்ததால் மக்கள் மிகவும் மனம் உடைந்தனர். பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஆதரவு இல்லாமல் 2014 இல் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த அவர், அதைச் செய்ய இருவரையும் அணுகினார். அதில் சில சரிவுகளைச் சந்தித்தார்.

2018 இல் மீண்டும் பாஜகவுடன் பிரிந்த பிறகு, சந்திரபாபு நாயுடு 2019 இல் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தார். அதாவது வெறும் 23 சட்டமன்றம் மற்றும் மூன்று மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே அவரது வெற்றி பெற்றது.

முன்பு காலத்தில் ஐக்கிய முன்னணி கன்வீனராக இருந்ததைப் போல சந்திரபாபு நாயுடுவுக்கு கிங்மேக்கராக இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் மறு உயிர் பெற்றுள்ளார். அதற்காக வாய்ப்பை அவருக்குக் காலம் வழங்கி உள்ளது.

பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் பிரதமராக வருவதற்கும் இதுவே அவருக்குச் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அவர் அவ்வாறு செய்ய மாட்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

அதற்கு ஏற்ப சரத்பவாரும் நாயுடுவுடன் தொலைப்பேசியில் உரையாடி உள்ளார். என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+