இது லிஸ்டுலேயே இல்லையே! பச்சை குத்துவது போல.. நிலவில் பொறிக்கப்பட்ட இந்திய கொடி! ரோவர் செய்த மேஜிக்
சென்னை: இன்று மாலை நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய நிலையில் தற்போது பிரக்யான் லேண்டர் நிலவில் இறங்கி பணிகளை தொடங்கி உள்ளது. இதன் மூலம் நிலவில் இந்தியாவின் கொடி பொறிக்கப்பட்டு உள்ளது. அது எப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்!
சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் நிலவில் இன்று விக்ரம் லேண்டர் தரையிறங்கி உள்ளது. மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 ன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியது.

நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்கி அங்கே ஆய்வு செய்ய விக்ரம் தொடங்கி உள்ளது. நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்க உள்ள முதல் நாடு இந்தியா என்று பெருமையை இதன் மூலம் இந்தியா பெற்று இருக்கிறது. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்கியதும் பல மீட்டர்கள் தூரத்திற்கு தூசி மண்டலம் நிலவில் பறந்தது. நிலவின் மேல்பகுதி மிகவும் மென்மையானது. அதேபோல் அதீத புழுதி மணல் கொண்டது. வெண்சாம்பல் போன்ற மணல் கொண்ட பகுதி இது.
அதனால் இங்கே தரையிறங்கியதும் பெரிய அளவில் புழுதி படலம் ஏற்பட்டது. இந்த புழுதி படலம் அடங்கும் வரை விக்ரம் லேண்டர் எதுவும் செய்யாது. வெறுமனே சிக்னலை மட்டுமே மேலே பறக்கும் ஆர்பிட்டருக்கு வழங்கும். நிலவின் வடக்கு பகுதியை விட தென் பகுதி புழு கொஞ்சும் கெட்டியானது. இந்த இடம் குளிராக, உறைந்து இருப்பதால் இங்கே பெரிதாக புழுதி இருக்காது. இருந்தாலும் விக்ரம் லேண்டர் போன்ற கனமான பொருள் இறங்கும் போது அங்கே மேற்பரப்பில் புழுதி கிளம்பவே செய்யும்.
அதன்படியே தென் பகுதியில் விக்ரம் தரையிறங்கியதும் பெரிய அளவில் புழுதி படலம் ஏற்பட்டது.இந்த புழுதி அடங்கும் வரை தற்போது விக்ரம் காத்திருந்தது. அதன்பின் இதன் சோலார் பேனல்கள் திறந்தது. முன்பே திறந்தால் அதில் புழுதி படிந்து சோலார் பயன்பாடு பாதிக்கப்படும். இப்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவரும் வெளியே வந்துள்ளது.
முத்திரை பதிக்கும்: நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கிய பிறகு, விக்ரமின் ஒரு பக்க பேனல் விரிவடைந்தது, பிரக்யான் ரோவர் வெளியே வருவதற்கு ஒரு சரிவை உருவாக்கியது. பிரக்யானின் சக்கரங்கள் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவுடன் பொறிக்கப்பட்டுள்ளன.
விக்ரமின் வயிற்றுப் பகுதியில் இருந்து பிரக்யான் வெளியே வந்து.. லேண்டரில் இருக்கும் பேனல் வழியாக சரிந்து ரோவர் வெளியே வந்தது. இதனால் பிரக்யான் உருளும் போது, சந்திர மேற்பரப்பில் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரைகளை பதித்து , இந்தியாவின் அடையாளத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. நிலவில் தென் பகுதியில் மனிதன் உருவாக்கும் முதல் சுவடாகும் இது.
இதன் டயரில் பழைய பச்சை குத்தும் அச்சு போலவே இந்திய மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரை இருக்கும். இது நிலவில் உருளும் போது மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரையை பதித்துக்கொண்டே சென்றது. இதன் மூலம் நிலவில் பச்சை குத்தியது போன்ற தோற்றம் ஏற்பட்டு உள்ளது.
நிலவின் ஈர்ப்பு விசை குறைவு மற்றும் அடர்த்தி காரணமாக மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரை அப்படியே அங்கேயே பல ஆயிரம் ஆண்டுகள் கூட இருக்கும். இந்தியா அங்கே சென்றதற்கான அடையாளமாக இது இருக்கும்.












Click it and Unblock the Notifications