விக்ரம் லேண்டர் இறங்கியதும்.. பல மீட்டருக்கு எழுந்த நிலவின் தூசி மண்டலம்! என்ன நடந்தது? அடுத்து என்ன
சென்னை: சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்கியதும் பல மீட்டர்கள் தூரத்திற்கு தூசி மண்டலம் நிலவில் பறந்தது. ஆனால் இதற்கு விக்ரம் லேண்டர்.. இஸ்ரோ எல்லாமே தயாராகவே இருந்தது.
சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் சரியாக இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. நொடிக்கு நொடி, நேர வித்தியாசமின்றி பகிரப்பட்ட டேட்டா மூலம் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும் விக்ரம் லேண்டர் இறங்கியதை உறுதி செய்துள்ளன. இந்த நிலையில் விக்ரம் லேண்டர் இறங்கிய நொடியில் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
புழுதி பொங்கியது: சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்கியதும் பல மீட்டர் தூரத்திற்கு தூசி மண்டலம் நிலவில் பறந்தது. நிலவின் மேல்பகுதி மிகவும் மென்மையானது. அதேபோல் அதீத புழுதி மணல் கொண்டது. வெண்சாம்பல் போன்ற மணல் கொண்ட பகுதி இது.

அதனால் இங்கே தரையிறங்கியதும் பெரிய அளவில் புழுதி படலம் ஏற்பட்டது. இந்த புழுதி படலம் அடங்கும் வரை விக்ரம் லேண்டர் எதுவும் செய்யாது. வெறுமனே சிக்னலை மட்டுமே மேலே பறக்கும் ஆர்பிட்டருக்கு வழங்கும். நிலவின் வடக்கு பகுதியை விட தென் பகுதி புழுதி கொஞ்சும் கெட்டியானது. இந்த இடம் குளிராக, உறைந்து இருப்பதால் இங்கே பெரிதாக புழுதி இருக்காது. இருந்தாலும் விக்ரம் லேண்டர் போன்ற கனமான பொருள் இறங்கும் போது அங்கே மேற்பரப்பில் புழுதி கிளம்பவே செய்யும்.
அதன்படியே தென் பகுதியில் விக்ரம் தரையிறங்கியதும் பெரிய அளவில் புழுதி படலம் ஏற்பட்டது.இந்த புழுதி அடங்கும் வரை தற்போது விக்ரம் காத்திருக்கும். அதன்பின் இதன் சோலார் பேனல்கள் திறக்கும். முன்பே திறந்தால் அதில் புழுதி படிந்து சோலார் பயன்பாடு பாதிக்கப்படும்.
இதையடுத்து விக்ரமின் ஒரு பக்க பேனல் விரிவடையும், பிரக்யான் ரோவர் வெளியே வருவதற்கு ஒரு சரிவை உருவாக்கும். பிரக்யானின் சக்கரங்கள் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவுடன் பொறிக்கப்பட்டுள்ளன. இதிலும் சோலார் பேனல் இருக்கும். விக்ரமின் வயிற்றுப் பகுதியில் இருந்து பிரக்யான் வெளியே வந்து.. லேண்டரில் இருக்கும் பேனல் வழியாக சரிந்து ரோவர் வெளியே வரும்.
இதனால் பிரக்யான் உருளும் போது, சந்திர மேற்பரப்பில் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரைகளை பதித்து , இந்தியாவின் அடையாளத்தை உருவாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது நிலவில் ஒரு நாள்.. அதாவது பூமியின் கணக்கில் 14 நாட்கள் இவை இரண்டும் செயல்படும். அதன்பின் அங்கே சூரிய ஒளி படாது என்பதால் இரண்டும் செயல் இழக்கும்.

லேண்டர் தொகுதி: 26 கிலோ ரோவர் உட்பட 1752 கிலோ
சந்திரயான் 3 மொத்த எடை: 3900 கிலோ
குறிக்கோள் என்ன?: சந்திரயான்-3 திட்டத்திற்கு இஸ்ரோ மூன்று முக்கிய குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளது.
லேண்டரை சரியாக நிலவில் தரையிறக்குதல்.
சந்திரனில் ரோவரின் நகரும் திறன்களைக் கவனித்து கண்காணித்தல்.
நிலவின் இரசாயன மற்றும் இயற்கை கூறுகள், மண், நீர் பண்புகளை ஆய்வு செய்தல்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்தல்.












Click it and Unblock the Notifications