பரங்கிமலையில் பெண்கள் தங்கும் விடுதியில் இவ்வளவு வசதிகளா? செங்கல்பட்டு கலெக்டர் சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இவர்களுக்கு தோழி என்ற பெயரில் மகளிர் தங்கும் விடுதிகள் தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் பரங்கிமலையில் மகளிர் விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் வசதிகளை குறிப்பிட்டுள்ள செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "பணித்திறனில் பெண்களின் பங்களிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். குறைந்த வாடகையில் பணிபுரியும் இடத்திற்கு அருகாமையில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் இருப்பது மிகவும் அவசியமான தேவையாக உள்ளது.

இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்குக்காக மகளிர் விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்தி வருகிறது.
மேலும் தமிழ்நாட்டில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும் "தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்" என்ற அமைப்பை அமைத்துள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் எண்.07. கிண்டி பூந்தமல்லி ரோடு, செயிண்ட் தாமஸ் மலை, செங்கல்பட்டு மாவட்டம்- 600089 என்ற முகவரியில் புதிதாக தோழி பணிபுரியும் மகளிர் விடுதி கட்டி முடிக்கப்பட்டு நேற்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த விடுதி 144 படுக்கை வசதியுடன் இருவர், நால்வர் தங்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த விடுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24/7 பாதுகாப்பு வசதி, இலவச வைபை, பயோமெட்ரிக், பொழுதுபோக்கு அறை ஆகிய நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் www.tnwwhcl.in என்ற இணையதளம் வாயிலாக படுக்கை அறைகள் இருப்புத்தன்மை அறிந்து தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கட்டணம் செலுத்திடும் முறை அறிமுகம் செய்யப்பட்டு பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியைச் சொந்த இடங்களை விட்டு வெளியூர்களில் தங்கி பணிபுரியும் அனைத்து மகளிரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. வருடங்கள், மாதங்கள் மட்டுமின்றி வாரங்கள், ஓரிரு நாட்களிலும் மகளிர் இந்த விடுதிகளில் தங்கிட வசதி செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications