மாமல்லபுரம் - செங்கல்பட்டு ரயில் திட்டம் எப்போது முடியும்? 17 ஆண்டுகளாக முடியாததற்கு காரணம் என்ன?
சென்னை: செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் வரை செல்லும் ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டு 17 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவு பெறாமல் இருக்க என்னென்ன காரணங்கள் என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து தமிழ் ரயில் தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் வழியாகக் கடலூர் வரைச் செல்லும் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆகியும், இதுவரை பணிகள் தொடங்கப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திட்டத்தின் பின்னணி
அறிவிப்பு: இத்திட்டம் முதன்முதலில் 2008-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
வழித்தடம்: #சென்னை - #கடலூர் இடையே, மாமல்லபுரம் மற்றும் #புதுச்சேரி வழியாகப் புதிய ரயில் பாதை அமைப்பதே இத்திட்டம். இதில் ஒரு முக்கிய பகுதியாகச் செங்கல்பட்டு - மாமல்லபுரம் இணைப்பு கருதப்படுகிறது.
நோக்கம்: கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) வழியாகச் சுற்றுலாத் தலங்களை இணைக்கவும், தென் மாவட்டங்களுக்கு மாற்றுப் பாதையை உருவாக்கவும் இது திட்டமிடப்பட்டது.
தாமதத்திற்கான முக்கியக் காரணங்கள்
நிதி ஒதுக்கீடு சர்ச்சை (புதுச்சேரி அரசு மறுப்பு):
இத்திட்டத்தின் ஒரு பகுதி புதுச்சேரி வழியாகச் செல்வதால், அங்குப் பாதை மாற்றத்திற்கும், இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கும் ஆகும் கூடுதல் செலவைப் புதுச்சேரி மாநில அரசு ஏற்க வேண்டும் என ரயில்வே வாரியம் கூறியது. ஆனால், கூடுதல் செலவை ஏற்க முடியாது எனப் புதுச்சேரி அரசு கைவிரித்துவிட்டதால், இத்திட்டம் மேற்கொண்டு நகர முடியாமல் முடங்கியுள்ளது.
வழித்தட மாற்றம் (Alignment Change):
ஆரம்பத்தில் சென்னையிலிருந்து (பெருங்குடி) மாமல்லபுரம் வரை நேரடியாகப் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது.
பின்னர், இந்தத் திட்டம் மாற்றப்பட்டு, செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் வழியாகச் செல்லும் வகையில் புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டது. இந்த மாற்றங்களும் காலதாமதத்திற்கு ஒரு காரணமாகும்.
நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்:
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுப்பதில் மாநில அரசு தாமதம் செய்வதாக மத்திய ரயில்வே அமைச்சர் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார். மாமல்லபுரம் திட்டமும் இதில் அடங்கும்.
தற்போதைய நிலை:சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "மாநில அரசுகளின் (குறிப்பாகப் புதுச்சேரி) ஒத்துழைப்பு இல்லாததால் திட்டம் நிலுவையில் உள்ளது" என மத்திய அரசு பதிலளித்துள்ளது. இதனால், 17 ஆண்டுகளாகியும் மாமல்லபுரம் ரயில் கனவு இன்னும் கானல் நீராகவே உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபல சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு செங்கல்பட்டில் இருந்து ரயில் பாதை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. சென்னை- கன்னியாகுமரி ரயில் தடத்தில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள மாமல்லபுரத்திற்கு ரயில் பாதையை நீட்டித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மாமல்லபுரம்- செங்கல்பட்டு இடையே பெருமாளேரி, குழிப்பாந்தண்டலம், புலியூர், ஈகை, மங்கலம், ருத்திரகோடி, கீரப்பாக்கம், புல்லேரி, துஞ்சம், நெம்மேலி, கீழவேடு, மேலேரிப்பாக்கம், ஆலப்பாக்கம், மேலமையூர், திருமணி ஆகிய கிராமங்கள் வழியாக ரயில் பாதை அமைக்க அமைக்க ஏற்கெனவே நிலம் கையகப்படுத்த முடிவெடுக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications