"தமிழகம், கர்நாடகா!" இரு மாநிலங்களை புரட்டிப் போடும் சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை! அட என்ன வேகம்
சென்னை: சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகள் படுவேகமாக நடந்து வரும் நிலையில், அது இரு மாநில மக்களுக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களை இணைக்கும் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. இந்த சென்னை- பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலையின் மூன்றாவது சாலை இணைப்புக்கான (NE-7) பணிகள் இப்போது தொடங்கியுள்ளது.
இந்தப் பணிகள் வரும் மார்ச் 2024இல் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஹோஸ்கோட்- மாலூர் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

எக்ஸ்பிரஸ் சாலை: சென்னை பெங்களூர் இடையே 262 கிமீ நீளம் கொண்டதாக அமையும் இந்த எக்ஸ்பிரஸ் சாலை தொழில்துறை வழித்தடமாக இருக்கும்.. இந்த சாலைப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தால் அது இரு நகரங்களுக்கும் மிகப் பெரிய பூஸ்டை தரும் இப்போது இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் 5 முதல் 6 மணி நேரமாக இருக்கும் நிலையில், இந்தப் பணிகள் நிறைவடைந்தால் பயண நேரம் 2.30 மணி நேரமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
26 எக்ஸ்பிரஸ் சாலைகளை உள்ளடக்கிய பாரத்மாலா சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக அமையும் இந்த சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இந்த எக்ஸ்பிரஸ் சாலையின் வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ. ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு ரூட்கள்: இந்த ரூட் இரு நகரங்களுக்கும் இடையே அடிக்கடி பயணிப்போருக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும். இப்போது இரு நகரங்களுக்கும் இடையே பயணிக்க இரண்டு ரூட்கள் மட்டுமே உள்ளது. ஒன்று 335-கிமீ நீளமுள்ள பழைய மெட்ராஸ் நெடுஞ்சாலை. இதில் நாம் ஹோஸ்கோட், முல்பாகல், சித்தூர், ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, கோயம்பேடு வழியாகச் செல்கிறது.
மற்றொரு வழி 372 கிமீ நீளமுள்ளது. அது பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டி, சாந்தபுரா, ஓசூர், கிருஷ்ணகிரி, ஆம்பூர், வாணியம்பாடி, வாலாஜாபேட்டை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி மற்றும் சென்னை வழியாகச் செல்கிறது.
எந்த ரூட்: இந்த எக்ஸ்பிரஸ் சாலை 3ஆவது ஆப்ஷனாக அமையும். பெங்களூர் புறநகரான ஹோசகோட்டில் தொடங்கும் இந்த எஸ்க்பிரஸ் சாலை மற்றும் சென்னைக்கு வெளியே ஸ்ரீபெரும்புதூர் வரை இருக்கும். இது மாலூர், பங்கார்பேட்டை, கோலார், சித்தூர், ராணிப்பேட்டை வழியாகச் செல்லும். மேலும், தற்போது அமையும் எக்ஸ்பிரஸ் சாலை என்பது பெங்களூரு ரிங் ரோட்டுடன் இணைக்கப்படும்.
இந்த எக்ஸ்பிரஸ் சாலையின் ஒட்டுமொத்தச் செலவு ரூ.17,000 கோடி ஆகும். குறிப்பாகப் பெங்களூரு-மாலூர் வரையிலான சாலைக்கு மட்டும் ரூ.1,160 கோடி செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு இந்த சாலைப் பணிகளுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.

நிதின் கட்கரி: முன்பு இது குறித்து சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "நெகிழ்வுத்தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளதே இதன் தனித்துவமான ஒன்றாகும். நீண்ட காலத்திற்கு வலுவாக இருக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்பிரஸ் சாலையின் ஆயுள், வலிமையை மேம்படுத்தும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
Ground Granulated Blast Furnace Slag என்ற ஒன்றை இந்த சாலை பணிகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். இது எஃகு உற்பத்தியின் போது பெறப்படும் துணை தயாரிப்பாகும். இந்த பொருள் தாதுவிலிருந்து இரும்பை பிரிக்கும் போது பெறப்படும் கழிவுப் பொருள். அதன் பிறகு இது நீர் ஜெட் துகள்களாக மாற்றப்படும். இதன் கார்பன் டை ஆக்சைடு வெளிப்பாடு குறைவாக இருப்பதால் இது பயன்படுத்தப்படுகிறது.
மேம்பாலங்கள்: இந்த நான்கு வழிச்சாலை, இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட சாலையாக இருக்கும். இதில் எட்டு பெரிய பாலங்கள், 103 சிறிய பாலங்கள் மற்றும் 17 மேம்பாலங்கள் இடம்பெற்று இருக்கிறது. இந்தத் திட்டம் முதலில் 2024 ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் எனக் கூறப்பட்டது. இருப்பினும், மத்திய அரசு இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், 2024 மார்ச் மாதமே இந்தத் திட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இரு நகரங்களுக்கும் இடையே மிக முக்கிய கனெக்டிவிட்டி ஆப்ஷனாக இருக்கும்.. இதில் ஒவ்வொரு நாளும் 45,000 முதல் 60,000 பேர் பயணிக்கலாம். இதன் மூலம் பெங்களூரில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வெறும் 3 மணி நேரத்திற்குள் சென்றடைய முடியும்.












Click it and Unblock the Notifications