20 பேருக்கு முடியல.. அவ்வளவு சீக்கிரமா திறக்கவிட மாட்டேன்.. பிலால் உணவகத்திற்கு பூட்டுபோட்ட அதிகாரி!
சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் உணவகத்தில் சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிலால் உணவகத்தில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வந்த நிலையில், கடையில் நிர்வாகிகள் யாரும் இல்லை. இதனைத் தொடர்ந்து பிலால் உணவகத்திற்கு அதிகாரிகள் தற்காலிகமாக பூட்டு போட்டு மூடி இருக்கின்றனர்.
சென்னையில் மவுண்ட் ரோடு மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் பிலால் உணவகம் செயல்பட்டு வருகிறது. இதில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பிலால் பிரியாணி உணவகத்தில் ரம்ஜானுக்கு முதல் நாளான மார்ச் 30ஆம் தேதியன்று பீப் சாப்பிட்ட 20க்கும் அதிகமானோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதியடைந்த அவர்கள், தண்டையார்பேட்டை மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உணவகம் முன்பாக முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் போராடியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், முறையாக புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்தி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 18 பேரின் குடும்பத்தினரும் புகார் அளித்தனர். அந்த புகாரில் பிலால் பிரியாணி உணவகத்தில் கெட்டுப் போன உணவு விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பிலால் பிரியாணி உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் சோதனையின் போது பிலால் உணவக உரிமையாளர், நிர்வாகிகள் யாரும் இல்லாததோடு, செல்ஃபோனில் அழைத்த போதும் பதில் அளிக்கவில்லை. இதனால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திருவல்லிக்கேணி பிலால் உணவகத்திற்கு பூட்டு போட்டனர். இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கூறுகையில், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு சுமார் 20 பேர் இங்கு உணவு சாப்பிட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் உடல் உபாதை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதொடர்பாக வாட்ஸ் அப் மூலம் புகார் வந்தது. உடனடியாக பிலால் உணவகம் வந்த பார்த்த போது, கடை 1 மணிக்கு தான் திறக்கப்படும் என்று கூறி இருக்கிறார்கள். இதனால் மதியம் 1 மணிக்கு பின் மீண்டும் உணவகத்திற்கு வந்தோம்.
ஆனால் கடையை மூடிவிட்டு சென்றுவிட்டனர். அவர்களின் செல்ஃபோனுக்கு தொடர்பு கொண்டோம். எந்த பதிலும் இல்லை. இதனால் போலீசாருடன் வந்து கடைக்கு பூட்டு போட்டுள்ளோம். எங்களுக்கு தெரியாமல் மீண்டும் கடையை திறக்க கூடாது. பூட்டை திறக்க வேண்டுமென்றால் எங்களின் அனுமதி தேவை. மக்கள் நலன் கருதி தற்காலிகமாக பூட்டு போட்டுள்ளோம்.
இந்த கடைகளில் இருக்கும் சாமான்கள் காணாமல் போகக் கூடாது என்று போலீசாருக்கு கடிதம் அளிக்கவுள்ளோம். காலை தகவல் வந்த உடனே, இங்கு வந்துவிட்டோம். இந்த கடையை அவ்வளவு சீக்கிரமாக திறக்க விட மாட்டோம். சரியான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். உணவு தொடர்பாக மக்கள் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications