சென்னை அண்ணா நகரில் தனக்கு உதவி செய்த யூடியூபர்.. கல்லூரி மாணவி தந்த மறக்க முடியாத பரிசு
சென்னை: இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தனது ஹெல்மெட்டில் உள்ள கேமரா மூலம் வாகனத்தை ஓட்டும் போது நடக்கும் காட்சிகளை பதிவு செய்து அதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வரும் யூடியூபர்' பால விக்னேஷ் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் சாலையில் மயங்கி விழுந்த தனக்கு உதவி செய்ததை தனது அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று கூறியுள்ளார்.
ஒருவருக்கு உதவி செய்தாலும் அதை அவரது அனுமதி இல்லாமல் பொதுவெளியில் பரப்புவது சட்டப்படி தவறு ஆகும். ஏனெனில் ஒருவர் பொது இடத்தில் மயங்கி விழுந்தால் அவருக்கு உதவுவது மனிதநேயம் என்றாலும் அவர் அந்தப் பலவீனமான நிலையில் இருப்பதைப் படம் பிடித்து அவரது அனுமதி இன்றி வெளியிடுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிமனித உரிமையை மீறுவதாகும்.

உதவி செய்பவர்கள் அதை வீடியோவாக எடுப்பதே பெரும்பாலும் தம்பட்டத்திற்காகத்தான் என்ற கருத்து உள்ளது. எதையுமே வியூஸ் கோணத்தில் பார்ப்பது அதிகமாக உள்ளது. அப்படி வியூஸ் ஆக மாற்ற விரும்புவோர், வீடியோ எடுத்தாலும், சம்பந்தப்பட்டவரிடம் அனுமதி பெறாமல் முகத்தைக் காட்டி வெளியிடுவது சட்டப்படி குற்றம் ஆகும். குறிப்பாக ஒரு பெண் மயங்கிய நிலையில் இருக்கும்போது, அவரின் கண்ணியத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் வீடியோ வெளியிடுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
யூடியூப் போன்ற தளங்கள் 'உதவி செய்வது போன்ற வீடியோக்களுக்கு' அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இதைப் பயன்படுத்திக்கொண்டு பலர் கேமராவைத் தலையில் மாட்டிக்கொண்டு வீடியோ எடுக்கிறார்கள். அதேநேரம் பெரும்பாலும் உதவி செய்யப்படும் வீடியோக்களை பகிரும் போது பிரச்சனை வருவது இல்லை.. எனினும் சிலர் ஆட்சேபனை தெரிவிப்பது உண்டு. அப்படித்தான் சென்னை அண்ணா நகரில் நடந்துள்ளது.
இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தனது ஹெல்மெட்டில் உள்ள கேமரா மூலம் வாகனத்தை ஓட்டும் போது நடக்கும் காட்சிகளை பதிவு செய்து அதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருபவர் 'யூடியூபர்' பால விக்னேஷ். இவர் கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அண்ணா நகர் பகுதியில் நடந்து சென்ற கல்லூரி மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு பால விக்னேஷ் உதவி செய்துள்ளார். இவை அனைத்தும் அவரது ஹெல்மெட்டில் உள்ள கேமராவில் வீடியோவாக பதிவாகி இருந்தது. அந்த வீடியோவை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வீடியோவை பார்த்த அந்த மாணவியும், அவரது பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீடியோவை நீக்குமாறு பால விக்னேஷ் வீட்டுக்கு சென்று கூறியதாக தெரிகிறது. மேலும் தனது அனுமதி இல்லாமலும் எடுக்கப்பட்ட வீடியோவை பால விக்னேஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருப்பதாக அவர் மீது அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். அதன்பேரில் பால விக்னேஷிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications