சென்னையில் வாழ்பவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்த கஷ்டம்.. விடியல் வரப்போகுது.. மாநகராட்சி மாஸ்
சென்னை: சென்னையை பொறுத்தவரை பெரிய கஷ்டமான விஷயம் என்னவென்றால் எந்த இடத்தில் எப்போது சாலையை தோண்டி போடுவார்களோ என்று தெரியாத நிலை தான். இனிமேல் சாலை தோண்டும் பணிகளை மக்கள் அறியும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் வாழ்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.. இந்த கஷ்டம் என்று சொன்னால் நிச்சயம் இந்த சாலைகள் தோண்டப்படுவதை சொல்லலாம். சென்னையில் எப்போது சாலை தோண்டுவார்கள் என்றே தெரியாது. ஒரு பக்கம் மெட்ரோ பணிக்காக சாலைகள் எல்லாம் தோண்டப்பட்டுள்ளது.

பல இடங்களில் ஒருவழிப்பாதை போல் சென்னை சாலைகள் உள்ளன. சென்னையில் அம்பத்தூர் முதல் தாம்பரம் வரையிலும். பனையூர் தொடங்கி எண்ணூர் வரையிலும் பல பகுதிகளில் எதாவது ஒரு காரணத்திற்காக சாலைகள் தோண்டப்படுவது அடிக்கடி நடக்கிறது.
சென்னையுடன் 2011ல் இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் நடந்து வருவதால் அந்த சாலைகள் எல்லாம் மோசமாக இருக்கின்றன. இந்த சூழலில் அடிக்கடி பள்ளம் வேறு அங்கு தோண்டப்படுகிறது.
சென்னையில் மெட்ரோ ரயில் , சாலை, மழைநீர் வடிகால் அமைக்கவும், மேம்பாலம் அமைக்கவும், பாலம் அமைக்கவும், மின்வட கேபிள் புதைக்கவும், குடிநீர் குழாய் புதைக்கவும் சாலைகள் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப் பணிகளில், அனைத்து துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சாலை, மழைநீர் வடிகால், மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் முடியாமல் இருக்க போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் எந்த துறையினர் எந்த சாலையை எந்த துறையினர் தோண்டுவார்கள் என்பது தெரியாத நிலை இருக்கிறது.
போனா வாரம் தான் சாலை அமைத்திருப்பார்கள், அடுத்த வாரமே வேறு ஒரு துறையினர் எதாவது காரணத்திற்காக சாலையை தோண்டி போட்டுவிட்டு மூடிவிட்டு போவார்கள். ஆனால் என்ன சாலை பள்ளம் மேடாக பல நாட்கள் இருக்கும். மழை பெய்தால் அங்கு தண்ணீர் தேங்கி மொத்த சாலையும் வீணாகிவிடும். இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று சென்னை மாநகராட்சியிடம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி தொடர்புடைய சேவைத் துறை அலுவலர்கள் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்துள்ளார்கள். இதன்படியே பல்துறை அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தி உள்ளது மாநகராட்சி. எனவே இனிமேல் அனைத்து சாலைப் பணிகளும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய போவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகளை சீராக மேற்கொள்ள ,12 அரசு துறைகளை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் சென்னையில் மேற்கொள்ளப்படும் சாலை வெட்டு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த விபரம், இணையதளத்தில் பதிவேற்ற போகிறார்களாம்.
எப்படி பதிவேற்றுவார்கள், இதனால் என்ன நன்மை என்பது குறித்து அதிகாரிகள் கூறும் போது, இதற்காக சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பிரத்யேகமாக ஒரு லிங்க் கொடுக்கப்படும். அதில் போய் எந்தப் பகுதியில், என்னென்ன பணிகள் நடைபெறுகிறது. அப்பணிகளை எத்துறை செய்யுறாங்க, அந்த பணிகளை செய்யும் ஒப்பந்தாரார் யார், பணிகள் முடிக்க வேண்டிய காலம் என்ன? அப்பணிகளால் ஏற்படும் இடர்பாடுகள் என்னென்ன, பணிகள் முடிந்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி எல்லாம் மக்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் கூடுதலான விஷேசமான விஷயம் என்னவென்றால், குறிப்பிட்ட காலத்தில் பணியை ஒப்பந்ததாரர் முடிக்காவிட்டால் அவருக்கு அபராதமும் மாநகராட்சி அதிகாரிகள் விதிக்கப்போவதாக தெரிவித்தனர். இதன் காரணமாக பணிகள் விரைவில் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications