சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்கள் கவனத்துக்கு.. 15 நாட்கள் இலக்கு.. மாநகராட்சி அதிரடி முடிவு
சென்னை மாநகராட்சி அடுத்த 15 நாட்களில் ரூ.1500 கோடி சொத்து வரி வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது.
சென்னை: சென்னை மாநகராட்சி அடுத்த 15 நாட்களில் ரூ.1500 கோடி சொத்து வரி வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது. தினசரி வார்டுக்கு 100 பில் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதற்காக வருவாய் துறையினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், முதன்மையானது சொத்து வரி மற்றும் தொழில் வரியாகும். சென்னையில் உள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அந்தந்த முதல் அரையாண்டின் வரியை ஏப்ரல் 15க்குள்ளும் இரண்டாம் அரையாண்டின் வரியை அக்டோபர் 15க்குள்ளும் முழுமையாக வரியை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வரி செலுத்தாதவர் மீது பெருநகர சென்னை மாநகராட்சி சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தனியாக கேட்பு அறிவிப்பு ஏதும் அனுப்பப்படுவதுஇல்லை.தற்போதுள்ள கட்டடத்தில் கூடுதலாக கட்டினாலும் மாற்றங்கள் ஏற்படுத்தினாலும், கட்டடத்தின் குடியிருப்புத் தன்மை மற்றும் உபயோகத் தன்மை மாறினாலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.

ஊக்கத்தொகை
சென்னை மாநகராட்சி சொத்து உரிமையாளர்களிடம் இருந்து ஒவ்வொரு அரையாண்டுக்கும் தலா 750 கோடி ரூபாய் என 1,500 கோடி ரூபாய் வரை வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்துவோருக்கு, ஐந்து சதவீதம் அல்லது 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்குகிறது.

அவகாசம்
ஆனால் அவகாசம் அளிக்கப்பட்ட நாட்களுக்கு பின் சொத்து வரி செலுத்துவோருக்கு, இரண்டு சதவீத தனி வட்டி விதிக்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டதால், தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு, ஜனவரி 12 வரை மாநகராட்சி அவகாசம் அளித்துள்ளது. ஆனாலும், பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள், மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

15 நாட்கள் டைம்
இதனால் சொத்து வரி செலுத்தாதோர் குறித்த பட்டியலை, சென்னை மாநகராட்சி https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற இணையதளத்தில் வெளியிட்டு வந்தது. இதில் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிதியாண்டு நிறைவு பெற இன்னும் 15 நாட்களே உள்ள காரணத்தால் சொத்து வசூலை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது

கூட்டம் நடந்தது
சொத்து வசூலை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி ஆய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் கடந்த மார்ச் 16ம் தேதி, மாநகர வருவாய் அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், வரி வசூலிப்பவர்கள், வரி கணக்கீட்டாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் இந்தாண்டு ரூ.1500 கோடி சொத்து வரி வசூலிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

எத்தனை பேர்
தற்போது வரை ரூ.1380 கோடி வசூல் செய்யப்பட் 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களில் 8.50 லட்சம் பேர் வரி செலுத்தி உள்ளதாகவும் இன்னும் 5 லட்சம் பேர் செலுத்தவில்லை என்றும் கூறிய அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி வசூலில் சென்னை முதலிடம் பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர். சிறப்பாக பணியாற்றுவதாக கூறி சொத்து வரி வசூலிக்கும் அதிகாரிகளை பாராட்டிய உயர் அதிகாரிகள், இனி வரும் இந்த 15 நாட்களும் நீங்கள் கொஞ்சம் அதிகமாக பணியாற்ற வேண்டும் என்றார்கள்.

5லட்சம் பேர்
தற்போது சென்னையில் சொத்து வரி செலுத்தாமல் உள்ள 5 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் வரி வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்களில் தீவிரமாக சொத்து வரி வசூல் செய்யும் பணியை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். ஒரு வார்டுக்கு தினசரி 100 பில்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications
