24 ஆக உயரும் சென்னை மாநகராட்சி மண்டலங்கள்.. “மிஸ் ஆக கூடாது” - வேகம் காட்டும் திமுக கவுன்சிலர்கள்!
சென்னை: சென்னை மாநகராட்சி 24 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில், சட்டசபைத் தொகுதிக்கு ஏற்ப, மண்டலங்கள் அதிகரிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை மாநகராட்சி நிர்வாகம், நிர்வாக வசதிக்காக 15 மண்டலங்களாக உள்ள மாநகராட்சியை 24 மண்டலங்களாக பிரிக்க உள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

15 மண்டலங்கள்
200 வார்டுகளை உள்ளடக்கிய பெருநகர சென்னை மாநகராட்சியில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 15 மண்டலங்கள் உள்ளன. மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மூலம் மண்டல குழு தலைவர் பதவிகள் நிரப்பப்படும். அந்தவகையில் தற்போது சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களும் திமுக வசம் உள்ளது.

22 தொகுதிகள்
2011-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியில் 10 மண்டலங்கள் இருந்தன. 155 வார்டுகள் இருந்தன. சென்னை மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பிறகு மண்டலங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டு 200 வார்டுகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ஆனால், மாநகராட்சியில் 22 சட்டசபைத் தொகுதிகள் உள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை தொகுதிகள் மட்டுமே உள்ளன. மற்ற ஆறு சட்டசபை தொகுதிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன.

மண்டலங்களை அதிகப்படுத்த
மாநகராட்சியில் உள்ள சில மண்டலங்களில் அதிகப்படியான வார்டுகளும், சில மண்டலங்களில் குறைவான எண்ணிக்கையிலும் வார்டுகள் உள்ளன. இதனால், பெரிய மண்டலங்களில் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பது, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவற்றில் காலதாமதமும், நடைமுறை சிக்கல்களும் ஏற்படுகின்றன. எனவே, பெரிய மண்டலங்களில் சிலவற்றிலிருந்து வார்டுகளை பிரித்து, புதிய மண்டலங்களை உருவாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.

அமைச்சர் உறுதி
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில், சட்டசபைத் தொகுதிகளுக்கு ஏற்ப, மண்டலங்கள் அதிகரிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவும், மாநகராட்சி மண்டலங்கள் அதிகரிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

24 மண்டலங்களாக
அதன்படி சென்னை மாநகராட்சி, 24 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் சட்டசபை தொகுதிகளுக்கு ஏற்ப, மண்டலங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியில் 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பெரிய தொகுதிகளும் சில உள்ளன. அவற்றை நிர்வாக வசதிக்காக ஒரே சராசரியாக வரையறை செய்யும்போது, 24 ஆக மண்டலங்கள் பிரிக்க வேண்டியுள்ளது.

ஓரிரு வாரங்களில்
இதுகுறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசித்தபின், ஓரிரு வாரங்களின் அரசின் ஒப்புதல் பெற்ற பின், மண்டலங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். சட்டசபை தொகுதிகள் வாரியாக வார்டுகள் பிரிக்கப்படும்போது, எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதி வாயிலாக, மண்டலத்தில் வளர்ச்சி பணிகள், அக்குறிப்பிட்ட வார்டுக்கு முழுமையாக கிடைக்கும் எனக் கூறுகின்றனர்.

திமுக கவுன்சிலர்கள் மகிழ்ச்சி
அதேசமயம், இந்த முடிவால் திமுகவினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திமுக கவுன்சிலர்கள் பலர் மண்டலக் குழு தலைவர், நிலைக்குழு தலைவர் பதவிகளுக்கு போட்டி போட்டனர். அதில் பலருக்கு பதவி கிடைக்காத நிலையில், தற்போது மண்டலங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது தங்களுக்கு மண்டலக் குழு பதவியைப் பெறுவதற்காக இப்போதே கட்சியில் அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிட்டனராம்.












Click it and Unblock the Notifications