சென்னை கிண்டியில் மாமியார் சொன்ன ஒரு வார்த்தை.. மானம் போனதாக கருதிய மருமகன்.. இப்படியா ஆகணும்
சென்னை: சென்னை கிண்டி நாகிரெட்டி தோட்டம் பகுதியை சேர்ந்த எழில் முருகன் என்பவர் தனது மாமியார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். குடித்துவிட்டு வந்த எழில்முருகனை அவரது மாமியார் சொன்ன வார்த்தை கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த கோபத்தை அவரது மகளிடம் காட்டியுள்ளார். இதனால் அவரது மாற்றுத்திறனாளி மனைவிக்கு என்ன நடந்தது தெரியுமா? ஒரு நிமிட ஆத்திரம் குடும்பத்தை என்ன செய்தது என்பதை பார்ப்போம்.
குடும்பத்தில் சண்டைகள், சச்சரவுகள் வருவது அடிக்கடி நடக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சிலர் கோபப்படுவார்கள். சிலர் காரணமே இல்லாமல் சண்டை போட்டு செல்வார்கள். சிலர் தன்னை அவனப்படுத்தினால் பொங்கி எழுந்து என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் சென்னை கிண்டியில் நடந்துள்ளது.

சென்னை கிண்டி நாகிரெட்டி தோட்டம் பகுதியில் 44 வயதாகும் எழில் முருகன் என்பவர் வசிக்கிறார். இவர் கட்டிடத்தொழிலாளியாவார். இவரது மனைவி சுகுணாவுக்கு 38 வயது ஆகிறது.. இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள். சுகுணா, காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.
வீட்டின் மாடியில் இவர்களும், கீழ்தள வீட்டில் சுகுணாவின் தாய் மற்றும் குடும்பத்தினரும் வசித்து வருகிறார்கள். எழில்முருகன் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தாராம். ஒருமுறை குடித்துவிட்டு, எழில்முருகன் கீழ் தளத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று அவர் அமரும் நாற்காலியில் அமர்ந்தார். அதற்கு அவரது மாமியார், "குடித்துவிட்டு மனைவியிடம் சண்டையிடும் நீ எதற்காக எனது நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறாய்?" என கேட்டாராம். இதனால் மாமியாருக்கும், எழில் முருகனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த எழில் முருகன், மாமியாரின் நாற்காலியில் மனைவி சுகுணா உட்கார்ந்திருப்பதை கண்டு கொந்தளித்தார். இதே நாற்காலியில் நான் உட்கார்ந்தபோது என்னை உனது தாய் தகாத வார்த்தைகளால் திட்டினார். ஆனால் நீ மட்டும் எதற்காக இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாய்?" என கேட்டுள்ளார்.
அப்போது மனைவியின் அருகில் இருந்த மாமியார் திட்டியுள்ளார். இதனால் திட்டியதால் ஆத்திரம் அடைந்த எழில்முருகன், மனைவி சுகுணாவின் கன்னத்தில் திடீரென ஓங்கி அறைந்தார். ஏற்கனவே, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுகுணா, கணவர் கன்னத்தில் அறைந்ததால் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சுகுணாவை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், சுகுணா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதைகேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து எழில்முருகன், மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி கிண்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கிண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications