30 ஆண்டுகளில் சென்னையை சூறையாடிய புயல்கள்..சின்ன பாதிப்போடு கடந்த மாண்டஸ்..வரலாற்றின் பக்கங்கள்
சென்னை: மாண்டஸ் புயலால் சென்னை மாநகரத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வருமோ என்று பலரும் அஞ்சிய நிலையில் அமைதியாக கரையைக் கடந்து சென்று விட்டது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெரிதும் கை கொடுத்தன. உயிரிழப்புகள் எதுவும் பெரிய அளவில் ஏற்படவில்லை எனவேதான் தமிழக அரசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமையன்று மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயல் கரை கடந்த போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. வடசென்னை முதல் தென் சென்னை வரைக்கும் கடலோர கிராமங்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டன.
வட கிழக்கு பருவ மழை காலத்தில், அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் மட்டுமே உருவாகின்றன. இதுவரை 6 புயல்கள் மட்டுமே வட கிழக்குப் பருவ மழை அல்லாத மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆராய்ச்சி மையத் தகவலின் படி 1893ம் ஆண்டு முதல் 2016 வரை தமிழகத்தில் 63 புயல்கள் கரையை கடந்துள்ளன. அதில் சென்னையை சில புயல்கள் அதிபயங்கரமாக தாக்கியுள்ளன.

கரையை கடக்கும் புயல்கள்
கடலில் உருவாகும் சில புயல்கள் கரையை நெருங்கியதும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். மணிக்கு 60 - 80 கி.மீ வரை சூறை காற்றை ஏற்படுத்துவது தீவிர புயல் அதை விட 100 கிலோ மீட்டருக்கும் மேல் காற்றை சுழற்றி அடிக்கும் அதி தீவிர புயல். கடந்த 125 ஆண்டுகளில், சென்னையில் நேரடியாக கரையை கடந்த புயல்களின் எண்ணிக்கை 14. அதில் 5 புயல்கள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மழையை மட்டும் தந்து சென்றுள்ளன.

தாக்கிய புயல்கள்
கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையை தாக்கிய வர்தா புயலையும் சேர்த்து 6 புயல்கள் மிகத் தீவிரமானவை என்று சுட்டிக் காட்டியுள்ளது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். இதேபோல மூன்று தீவிர புயல்கள் சென்னையைத் தாக்கியுள்ளன. சென்னை மற்றும் மகாபலிபுரம் பகுதிகளைச் சேர்த்து மொத்தம் 22 புயல்கள் தாக்கியுள்ளன.

சுழன்றடித்த சூறாவளி
1972 ஆம் ஆண்டு சென்னையை புயல் தாக்கிய போது 100 மிமீ முதல் 150 மிமீ வரை மழை பதிவானது. 1984ஆம் ஆண்டு மற்றொரு புயல் சென்னையைத் தாக்கியது. இந்தப் புயல் ஸ்ரீஹரிகோட்டா வழியாக கரையைக் கடந்தது. 1985ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய புயலானது நெல்லூர் வழியாக கரையைக் கடந்தது. அப்போது காற்றின் வேகமானது மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வரை வீசியது.

உயிர்பலி வாங்கிய 1994 புயல்
1994 ஆம் ஆண்டு சென்னையை தாக்கிய அதி தீவிர புயலால் 2 நாட்களில் 350 மிமீ மழை பதிவானது. காற்றின் வேகமானது 120 கிமீ முதல் 140 கிமீ வரை வீசியது. அக்டோபர் 29ஆம் தேதி உருவான புயல் 31ஆம் தேதி சென்னையின் கரையை கோரமாக சீண்டியது. தமிழகத்தில் 69 பேர் பலியானதாக கூறப்படுகிறது. 26 சென்டி மீட்டர் மழை பதிவானது.

பலியான உயிர்கள்
புயல் கரையைக் கடந்த போது 132 கி.மீ வேகத்தில் அதிவேக காற்று வீசியது. வரலாற்றில் சென்னைப் பார்த்த உச்சகட்ட காற்றின் வேகம் அதுவாகத்தான் இருந்தது. 1994ஆம் ஆண்டு தாக்கிய புயலினால் 61 கோடி ரூபாய்க்கு பொருள் சேதம் ஏற்பட்டது. கடந்த நுற்றாண்டில் சென்னை போன்ற ஒரு மாநகரத்தில் புயலின் கண் எனப்படும் மத்திய சுழல் பகுதி நேரடியாக சென்னையைக் கடந்தது 1994ம் ஆண்டுதான்.

புஸ் ஆன ஜல் புயல்
ஜல் புயல், சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடந்தது. அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று அச்சுறுத்துலுடன் சென்னையை நோக்கி முன்னேறிய ஜல் மிகவும் வலு இழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைத் தொட்டது. இதனால் கன மழை பெய்தது. சென்னைக்கு பெரிய அளவு பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் ஆந்திராவை வெள்ளக் காடாக்கியது.

தானே தாக்கிய சோகம்
2011 டிசம்பரில் உருவான தானே புயல் புதுச்சேரி - கடலுார் இடையே மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. பயிர்கள், மரங்கள், மின்கம்பங்கள் நாசமாகின. 1994ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னைக்கு அருகே கரையைக் கடந்த தீவிர புயல் நீலம். அக்டோபர் 31ஆம் தேதி மகாபலிபுரத்தில் கரையைக் கடந்த நீலம் புயலால், சென்னையில் 85 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.

நீலம் புயலால் தரை தட்டிய கப்பல்
சென்னையை நீலம் புயல் தாக்கிய போது 120 மிமீ மழை பதிவானது. காற்றின் வேகமானது 70 கிமீ வேகத்தில் வீசியது. சென்னை துறைமுகத்தில் 7ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. நீலத்தின் வேகத்தால் தரை தட்டி நின்ற பிரதீபா காவிரி கப்பலின், 5 மாலுமிகளையும் சேர்த்து மொத்தம் சென்னையில் 19 பேர் பலியாகினர்.

வரலாற்றில் நின்ற வர்தா
சென்னையைத் தாக்கிய 6 அதி தீவிர புயல்களில் 2016ஆம் ஆண்டு தாக்கிய வர்தா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. வர்தா புயல் கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையை தாக்கியது. சென்னையில் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. வர்தா புயலின் கண் பகுதியும் சென்னையைக் கடந்தது. 192 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் சென்னையில் நீண்ட காலமாக இருந்த பல மரங்கள் சரிந்து விழுந்தன. வரலாறு காணாத பெரும்புயலும், மிக மோசமான புயலும் வர்தா தான். இந்த புயலால் ஏற்றப்பட்ட சேதம் 1000 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. 24 மணி நேரம் விடாமல் கொட்டித்தீர்த்த மழையால் சென்னை நகரமே பல நாட்கள் ஸ்தம்பித்தது.

நிவர் புயல்
கடந்த 2018 நவம்பரில் கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 2020 நவம்பரில் வங்கக்கடலில் உருவான நிவர் புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது.

மாண்டஸ் புயல் பாதிப்பு
மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமையன்று மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயல் கரை கடந்த போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சென்னையில் 694 மரங்கள் சாய்ந்ததாக அரசு தகவல் தெரிவித்தது.தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் மக்களை காத்தது. புயலுக்கு பிந்தைய நடவடிக்கையும் நிவாரண உதவிகளும் பாராட்டுகளை பெற்று வருகின்றன.

எதையும் கடந்து எளிதில் மீளும் சென்னை
தமிழகத்தையும் சென்னை மாநகரத்தையும் எத்தனையோ புயல்களும் மழையும் தாக்கியுள்ளன. சுனாமி என்ற ஆழிப்பேரலை சென்னையை சூறையாடியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு மிகப்பெரிய வெள்ளத்தையும் சந்தித்துள்ளது தலைநகரம் சென்னை. எத்தனை இயற்கை பேரிடர்கள் வந்தாலும் எதையும் எளிதில் சமாளித்து மீண்டு எழுந்து கம்பீரமாக நிற்பதுதான் சென்னை மாநகரத்தின் சிறப்பு.












Click it and Unblock the Notifications