தாலி சங்கிலி பெண்களுக்கு புனிதமானது! அதை எப்படி பறிமுதல் செய்யலாம்? சுங்கத் துறைக்கு நீதிபதி கேள்வி
சென்னை: தாலிச் சங்கிலி என்பது நம் நாட்டின் கலாச்சாரத்தை கொண்ட பெண்களுக்கு புனிதமானது என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை விமான நிலையங்களில் பதிவான இரு வேறு சம்பவங்களுக்கு வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் சபீனா முகமது மொய்தீன். இவர் ஹைகோர்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு அபுதாபியில் இருந்து கடந்த 2023ம் ஆண்டு சென்னை விமான நிலையத்திற்கு குடும்பத்தினருடன் வந்தேன்.

அப்போது நான் கையில் அணிந்திருந்த 135 கிராம் எடை கொண்ட 10 தங்க வளையல்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சுங்க வரியாக ரூ 7.60 லட்சம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். எனவே அந்த தங்க வளையல்களை திரும்ப ஒப்படைக்க சுங்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் சபீனா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, "இந்த 10 வளையல்களுக்கு ரூ.7.60 லட்சம் செலுத்த வேண்டும் என்ற அதிகாரிகளின் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. திருமண நிகழ்வின் போது தங்க நகைகளை அணிந்து கொள்வது இயல்பான ஒன்றுதான்.
வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகள் 10-க்கும் மேற்பட்ட தங்க நகைகளை அணிந்து இருந்தாலோ மறைத்து வைத்திருந்தாலோ அதை பறிமுதல் செய்யலாம். ஆனல் மனுதாரர் வெளிப்படையாக அந்த வளையல்களை தனது கையில் அணிந்து வந்துள்ளார். எனவே பறிமுதல் செய்துள்ள அந்த தங்க வளையல்களை அவரிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
அது போல் மற்றொரு வழக்கு: இலங்கையை சேர்ந்த தனுஷிகா என்பவருக்கும் பிரான்ஸில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் திருமணம் நடந்தது.
இதையடுத்து ஜெயகாந்த் பிரான்ஸுக்கு சென்றுவிட்டார். தனுஷிகா இலங்கைக்கு சென்றுவிட்டார். தனது மனைவி தனுஷிகாவை பிரான்ஸுக்கு அழைத்து செல்ல ஜெயகாந்த் முடிவு செய்திருந்தார்.
இதற்காக ஜெயகாந்த் பிரான்ஸில் இருந்தும் தனுஷிகா இலங்கையில் இருந்தும் சென்னைக்கு வந்தனர். அங்கு சில நாட்கள் தங்கியிருந்த இவர்கள் கோயில்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக கடந்த டிசம்பரில் தனுஷிகா தனது மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவினர்களுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது தனுஷிகாவின் கழுத்தில் இருந்த தங்க தாலி சங்கிலி கூடுதல் எடையுடன் இருப்பதாக கூறி, பெண் சுங்கத் துறை அதிகாரியான மைதிலி அதை பறிமுதல் செய்தார். இது குறித்து தனுஷிகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: பொதுவாக தங்கச் சங்கிலி என்பது நம் நாட்டின் கலாச்சாரத்தைக் கொண்ட இந்து மத பெண்களுக்கு புனிதமானது.
விசாரணை என்ற பெயரில் அதை கழற்றச் சொல்லி பறிமுதல் செய்வதை ஏற்க முடியாது. எனவே சம்பந்தப்பட்ட சுங்கத் துறை பெண் அதிகாரி மீது உயரதிகாரிகள் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மனுதாரரிடமிருந்து பறிமுதல் செய்துள்ள தாலிச் சங்கிலியை திருப்பிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications