அண்ணா பல்கலைக்கழக மாணவி FIR லீக்! சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் எஃப்ஐஆரில் அவருடைய அடையாளத்தை குறிப்பிட்டது சட்டப்படி தவறு என்றும் சென்னை காவல் துறை ஆணையர் அருண் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான பொது நல வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர்.

அப்போது எஃப்ஐஆரை போலீஸார் கசியவிடவில்லை என அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் தெரிவித்தார். அப்படியென்றால் சிட்டிசன் போர்ட்டலில் இருந்து 14 பேர் பார்த்தார்கள், அவர்களிடம் விசாரிக்கிறோம் என சொல்கிறீர்களே. எஃப்ஐஆர் கசியாமலா விசாரிப்பதாக சொல்கிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர்.
இந்த சம்பவத்தில் அண்ணா பல்கலைக்கழக தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் முன் வைத்த வாதத்தில், துரதிருஷ்டவசமான இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பில் உள்ள பல்கலைக்கழக வளாத்திற்கு 8 வழிகள் உள்ளன.
அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 988 கேமராக்கள் உள்ளன. 849 செயல்படுகின்றன. மற்றவை செயல்படவில்லை. மாதந்தோறும் கேமராக்கள் செயல்படுகிறதா என பரிசோதனை செய்யப்படுகிறது. சம்பவத்துக்கு பின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணைக்கு அண்ணா பல்கலை முழு ஒத்துழைப்பு வழங்குகிறது என தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், மாணவி அண்ணா பல்கலையில் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்றனர். அதற்கு பாதிக்கப்பட்ட மாணவி அண்ணா பல்கலைக்கழகத்தில்தான் படிப்பை தொடர்வார் என அண்ணா பல்கலைக்கழக வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ 25 லட்சம் வழங்க வேண்டும். கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணங்களையும் அவரிடம் வசூலிக்கக் கூடாது.
மாணவியின் பெற்றோருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். மாணவியின் அடையாளத்தை எஃப்ஐஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. முதல் தகவல் அறிக்கையில் உள்ள வார்த்தைகளும் கண்ணியத்துடன் இருக்க வேண்டும்.
எஃப்ஐஆரில் மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. சென்னை காவல் துறை ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எஃப்ஐஆர் வெளியாவது புகாரளித்தவரின் சுதந்திரத்தை பறிக்கும். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த மாணவி படிப்பை தொடர அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications