சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி வெற்றியை எதிர்த்த வழக்கு! உதயநிதி ஸ்டாலின் மனு மீது இன்று தீர்ப்பு!
சென்னை: சேப்பாக்கம் - திருவல்லக்கேணி தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரிக்கக் கோரி அந்த தொகுதி எம்எல்ஏவும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 2ஆவது முறையாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வென்றார். இந்த நிலையில் அந்த வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி அந்த தொகுதியில் போட்டியிட்ட தேனியை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பி.மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது கடந்த மாதம், நீதிபதி ஜி. அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார்.
அவர் தனது வாதத்தில், "இந்த தேர்தல் வழக்கு 45 நாட்கள் காலக்கெடுவுக்கு பிறகு தொடரப்பட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல!
தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து 45 நாட்களை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் ஜூன் 17ஆம் தேதியே தேர்தல் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கை ஒரு நாள் காலதாமதமாக ஜூன் 18ஆம் தேதி தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும்" என வாதிட்டார்.
இதற்கு மிலானி தரப்பு, "இந்த வழக்கு உரிய காலக்கெடுவுக்குள் தொடரப்பட்டிருப்பதை உயர்நீதிமன்ற பதிவுத் துறை அனுமதித்து ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருள் முருகன், இந்த வழக்கில் இரு தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யக் கோரி அக்டோபர் 26ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தார். அன்றைய தினம் எழுத்துப்பூர்வ வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நவம்பர் 13 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் இன்றைய தினம் உதயநிதி ஸ்டாலினின் மனு மீது தீர்ப்பளிக்கப்படுகிறது. இதில் உதயநிதிக்கு சாதகமாக தீர்ப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் 62,992 வாக்குகளை பெற்று வென்றார். அது போல் வழக்கு தொடந்திருக்கும் சுயேச்சை வேட்பாளர் பி.மிலானி 30 வாக்குகளை பெற்றுள்ளார்.



Click it and Unblock the Notifications
