கணவனுக்கு வீடியோ அனுப்பிய மனைவி.. ஓடும் ரயிலில் மகனை தள்ளி.. ஏன் தெரியுமா? விருதுநகரில் அதிர்ச்சி
விருதுநகர்: கடன் வாங்குவது எளிது.. ஆனால், வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல், வட்டி மேல் வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால் குடும்பமே எவ்வளவு பாதிக்கப்படும்? விருதுநகர் அருகே கடன் பிரச்சினையில் சிக்கிய பெண், தனது 10 வயது மகனை ரயில் முன் தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி பாண்டிச்செல்வி (30). பாண்டிச்செல்விக்கு முதல் கணவர் மூலம் 10 வயதில் பிரதீப் என்ற மகனும், 13 வயதில் ஒரு மகளும் இருந்தனர்.

விருதுநகர் பாண்டிச்செல்வி
முத்துக்குமார் வெங்காய வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த வியாபாரத்துக்காக பாண்டிச்செல்வி அதே பகுதியில் வசிப்பவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் குடும்பம் சிரமத்தில் இருந்துள்ளது.
இதனிடையே, பணம் கொடுத்தவர்கள் கடனை திருப்பிக் கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுக்க துவங்கி விட்டார்களாம்.. அத்துடன் பாண்டிச்செல்வியிடம் தினமும் ரூ.1,000 கந்துவட்டி வசூலிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தினமும் 1000 ரூபாயை புரட்டி தர முடியாமல், கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் பாண்டிச்செல்வி..
தினமும் 1000 கந்துவட்டி
இந்நிலையில், நேற்று மாலை தனது மகன் பிரதீப்புடன் சூலக்கரை ரயில்வே கேட் அருகே பாண்டிச்செல்வி சென்றுள்ளார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது... ரயில் வருவதை பார்த்த பிரதீப், அம்மாவின் பிடியில் இருந்து தப்பித்து ஓட முயன்றாராம்.. ஆனால், பாண்டிச்செல்வி மகனை இறுகப் பிடித்து தண்டவாளம் அருகே அழைத்துச் சென்று, மகனை ரயில் முன் தள்ளியதுடன், தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முன்பு பாண்டிச்செல்வி தனது கணவர் முத்துக்குமாருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "கடனை அடைக்க முடியவில்லை. கடன்காரர்கள் பேசும் வார்த்தைகள் தாங்க முடியவில்லை. கடனுக்கு பயந்து பயந்து ஓடி வாழ முடியவில்லை. நானும் என் மகனும் கோயிலுக்கு போகிறோம். என் மகளை மட்டும் நன்றாக பார்த்துக் கொள். அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடு குமரா. எல்லாரும் பாவம் தான். தெருவில் மட்டும் என் மகளை விட்டு விடாதே" என்று உருக்கமாக பேசியுள்ளார்.
மகனை ரயிலில் தள்ளி
கடன் பிரச்சினையில் தாயும், மகனும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், கடன் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடி மற்றும் கந்துவட்டி வசூல் தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பாண்டிச்செல்விக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்தது.. ஆனால், அந்த கணவரை விட்டு பிரிந்து சில ஆண்டுகள் ஆகிறது. முதல் கணவரின் பிள்ளைகள் தான் இறந்த பிரதீப், மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மகள். 2 பிள்ளைகளையும் வளர்த்து வந்த பாண்டிச் செல்வி, முத்துக்குமாரை 2வது திருமணம் செய்தார். ஆனால் கடன் தொல்லை தற்கொலை வரை சென்றுவிட்டது.



Click it and Unblock the Notifications
