நடிகர் சூர்யாவின் கங்குவா.. கோர்ட்டுக்கு போன ஸ்டூடியோ க்ரீன்! படத்தை நெட்டில் வெளியிட அதிரடி தடை!
சென்னை: நடிகர் சூர்யா உள்ளிடோர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் உலகெங்கிலும் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்நிலையில் கங்குவா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுத்தை சிவா முதன்முதலாக நடிகர் சூர்யாவை வைத்து கங்குவா என்ற திரைப்படத்தை இயக்குகிறார் என்ற செய்தி வெளியான போதே பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்தன.

சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திசா பதானி, பாபி தியோள், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து இருந்தன. வரலாற்று பின்னணியில் அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் இரு பாகங்களாக இந்த படம் உருவாகி உள்ளது.
கங்குவா கேரக்டரில் நடிகர் சூர்யாவும் அனிமல் படத்தில் நடித்து பிரபலமான பாபி தியோல் உதிரன் எனும் பாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் சர்ப்ரைஸ் கதாபாத்திரம் ஒன்றும் படத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது நடிகர் கார்த்தியாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். கங்குவா படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஐமேக்ஸ் மற்றும் 3d அம்சத்தில் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் முதலில் அக்டோபர் 10ஆம் தேதி படம் வெளியாக இருந்தது. பின்னர் வேட்டையன் ரிலீஸ் காரணமாக பட வெளியீடு தள்ளிப் போனது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின் படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதை அடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளை நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டனர். குறிப்பாக சூர்யா இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு படத்துக்கான ப்ரோமோஷன் செய்து வந்தார். இந்தி, தெலுங்கு பிக் பாஸ், பிற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் ரசிகர்கள் சந்திப்பு என கடந்த இரண்டு வாரங்களாக பிசியாகவே இருந்தார் சூர்யா.
இதற்கிடையே படம் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளையும் சந்திக்க வேண்டி இருந்தது. சுமார் ஒன்றை கோடி டெபாசிட் செய்யப்பட்டால் தான் பணம் வெளியாகும் என்ற நிலை தற்போது இருக்கிறது. இந்நிலையில் கங்குவா படத்தை சட்டவிரோதமாக 2365 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, உலகம் முழுவதும் 3,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா படம் வெளியாகயுள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், அதன்மூலம் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.
இதையடுத்து, கங்குவா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications