சென்னையில் கோயம்பேடு டூ கிண்டி.. அடியோடு மாறுது ரூட்.. வருகிறது பஸ் பே திட்டம்.. இனி இதுதான் ரூல்ஸ்
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், தமிழக போக்குவரத்து துறை பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது. அந்த வகையில், இப்போதும் முக்கிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
திமுக இந்த முறை ஆட்சிப்பொறுப்பேற்றதுமே, சிங்கார சென்னை திட்டத்தில் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது.. இது முதல்வர் ஸ்டாலினின் கனவுத்திட்டமாகவும் உள்ளது. அதனால்தான், பட்ஜெட் அறிவிப்புகளில்கூட, சிங்கார சென்னைக்கு பிரத்யேகமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

முக்கிய சாலைகள்: எனவே, பூங்காங்கள், பாலங்கள், சாலைகள், என பல்வேறு விஷயங்களில் அதிக அக்கறையை செலுத்தி வருகிறது. அந்தவகையில், சென்னையின் முக்கிய சாலைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன..
குறிப்பாக, ஏற்கனவே இருந்த பகுதிகளை, சீரமைத்து, புனரமைத்து வருவது ஒருபுறமும், சாலைகளை அகலமாக்குவது, புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்குவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இனி நிறைய பாலங்களும் திறப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக சொல்கிறார்கள்.. சமீபத்தில்கூட வாகன ஓட்டிகளின் வசதிக்காக, புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு, சென்னைவாசிகளின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது.
டிராபிக் ஜாம்: இதோ இப்போதும், சாலைப்போக்குவரத்தில் சில மாறுதல்களை கொண்டுவரலாம் என்கிறார்கள். சென்னையை பொறுத்தவரை, 31 பணிமனைகளில் 629 வழித்தடங்களில் மொத்த 3,436 பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.. இவைகளில், பெரும்பாலானவை நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவது மற்றும் இறக்குவது, மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
போக்குவரத்து நெரிசலுக்கு இவையெல்லாம் காரணங்களாக அமைவதுடன், சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டுவிடுகின்றன. அதனால்தான், இந்த பிரச்சனைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, "பஸ் பே" என்ற திட்டத்தை சென்னை மாநகராட்சியில் நடைமுறைப்படுத்த அரசு தயாராகி வருகிறதாம்.
புதிய திட்டம்: அதாவது, வெறும் பஸ்கள் மட்டுமே பயணிப்பதற்கான தனி பாதைதான், இந்த "பஸ் பே" என்பதாகும். பேருந்துகள் தடையில்லாமல் பயணிப்பதை உறுதிப்படுத்தும் திட்டம் இதுவாகும்.
பேருந்து நிறுத்தம் வருவதற்கு, சில மீட்டர் முன்னாடியும், பேருந்து நிறுத்தம் தாண்டியும் சில மீட்டர் இடைவெளிக்கு இந்த பாதை நீண்டிருக்கும். இதனால், பஸ்கள், எளிதாக பஸ் ஸ்டாப்புக்கு வந்துவிட்டு, மறுபடியும் தடையில்லாமல் வெளியேறி செல்லும் விதமாக இந்த பாதை வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால், பயணிகளுக்கு பஸ்ஸில் ஏறி, இறங்க எளிதாக இருக்கும். பஸ் ஸ்டாண்டை தாண்டி, பஸ்கள் நிறுத்தப்படுவதும், இதனால் தவிர்க்கப்படும்.
விரைவில் அறிவிப்பு: இந்த பாதைக்குள் பஸ்கள் தவிர, மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. சென்னையில் முதற்கட்டமாக கிண்டி முதல் கோயம்பேடு சிஎம்பிடி பேருந்து நிறுத்தம் வரையிலும், தாம்பரம் வரையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சொல்கிறார்கள்..
இந்த தனி பாதையை பயன்படுத்துவதை ஒவ்வொரு பஸ் டிரைவரும் உறுதி செய்ய வேண்டுமாம்.. இது சம்பந்தமான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதால், விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications