தமிழ்நாட்டின் இந்த 9 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு மழை கொட்ட போகுது.. வானிலை மையம் ஜில்லென்ற செய்தி!
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டியது.
தலைநகர் சென்னையிலும் எதிர்பார்ப்புக்கு மாறாக பலத்த மழை கொட்டியது. வில்லிவாக்கம்,கோயம்பேடு,அமைந்தகரை, தியாகராயநகர், அரும்பாக்கம், கோயம்பேடு, எழும்பூர்,சென்ட்ரல், புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றும் பலத்த மழை கொட்டியது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 நாட்களுக்கு மழை
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:- தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். இதேபோல் மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலுார், காஞ்சிபுரம், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

கோவையில் மழைக்கு வாய்ப்பு
நாளை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பெய்யும். திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, கரூர், ஈரோடு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னையில் எப்படி?
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு .நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அவ்வப்போது கன மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம், ஏற்காடு; திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அதிகபட்சமாக தலா, 10 செ.மீ., மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் 9 செ.மீ, செங்கத்தில் 8 செ.மீ மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல், 25-ம் தேதி வரை, பலத்த காற்று மணிக்கு 40 - 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications