சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் உயர்கிறதா? பயணிகளுக்கு CMRL சொன்ன குட் நியூஸ்!
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் உள்ளன. இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பயண தூரத்தைப் பொறுத்து ரூ.1 முதல் ரூ.5 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையம் செல்லும் வழித்தட டிக்கெட்டுகள் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் விலையும் உயர்த்தப்படும் என்ற தகவல் பரவிய நிலையில் இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று கூறியுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை அன்றாடம் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய கட்டண அமைப்பு மாறாமல் தொடரும் என்றும், பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக சேவைகளை மேலும் தரமாக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் CMRL தெரிவித்துள்ளது.
புதிய மெட்ரோ பாதைகளை விரிவாக்குவது மற்றும் நவீன வசதிகளை அறிமுகப்படுத்துவது போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் கட்டண மாற்றங்கள் தேவைப்பட்டால், பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு, வெளிப்படையான முறையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று CMRL உறுதி அளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை, நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பயணிகளுக்கு வசதியான பயண அனுபவத்தை வழங்குவதற்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. சென்னையில் தற்போது 54 கி.மீ தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் 1,03,78,835 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து முதல் முறையாக ஒரே மாதத்தில் ஒரு கோடி பேர் கடந்த மாதம் பயணித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு, பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications