மெகா பிளானை போட்ட சென்னை மெட்ரோ.. நகர் முழுக்க வரப்போகும் மாற்றம்.. மேஜர் பிரச்சனைக்கு முழு தீர்வு
சென்னை: சென்னை மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெட்ரோவை பயன்படுத்தும் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படி சென்னை மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை குறித்து இப்போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் இதுவரை மிக முக்கியமான பொது போக்குவரத்து முறையாகப் பேருந்துகளே இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகப் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும், பேருந்துகளே பிரதான பொது போக்குவரத்து முறையாக இருந்து வருகிறது. ஆனால், மெட்ரோவில் வருகைக்குப் பிறகு நிலைமை மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ
இப்போது நகரில் 2 ரூட்களில் 54 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஏசி வசதி, டைமிங், வேகம் எனப் பல காரணங்களால் பொதுமக்கள் மெட்ரோவில் பயணிக்கவே ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாகவே தொடர்ச்சியாக மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது சென்னை மெட்ரோவில் தினசரி 3.5 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். அதிகபட்சமாகக் கடந்த மாதம் ஒரே நாளில் 4 லட்சம் பேர் கூட மெட்ரோவில் பயணித்துள்ளனர். வரும் காலங்களில் இது மேலும் உயரவே போகிறது.
மெட்ரோவில் மக்களை ஈர்க்க சென்னை மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மெட்ரோ கார்டு சலுகை, ஆன்லைன் டிக்கெட்களுக்கு சலுகை எனப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல மெட்ரோ நிலையங்கள் அருகே உள்ள பகுதிகளில் வசிப்போர் மெட்ரோவை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், ஃபீடர் பஸ்கள் அதாவது இணைப்பு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
மிக முக்கிய நடவடிக்கை
ஓரிரு மெட்ரோ நிலையங்களில் மட்டுமே மாநகர பேருந்துகள் நின்று செல்லும் சூழலில், இந்த இணைப்பு பேருந்துகளுக்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த இணைப்பு பேருந்துகளை பண்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், இதன் எண்ணிக்கையை உயர்த்த சிஎம்ஆர்எல் முடிவு செய்துள்ளது. மேலும், இணைப்பு பேருந்துகளுக்காகவே எனத் தனியாக ஒரு துணை நிறுவனத்தை உருவாக்கவும் மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திட்டம் என்ன
மெட்ரோ ரயில் நிலையங்களுக்குப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் இணைப்பு பேருந்துகளை இயக்க சென்னை மெட்ரோ எடுத்துள்ள இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இதற்காக மெட்ரோ தரப்பு மாநில போக்குவரத்து ஆணையத்திற்கு முறையாக விண்ணப்பித்துள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் பேருந்துகள் மட்டுமின்றி மற்ற நகரங்களில் இருப்பது போல டாக்ஸி, ஆட்டோ, வேன் போன்ற உள்ளிட்டவற்றையும் இணைப்பு வாகனங்களாக ஒப்பந்த அடிப்படையில் இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ
சென்னையில் இப்போது இரு ரூட்களில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் கூட அடுத்த கட்ட மெட்ரோ கட்டுமானம் படுவேகமாகவே நடந்து வருகிறது. சென்னை மெட்ரோ 2வது கட்டத்தில் மொத்தம் 3 ரூட்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அடுத்தாண்டு தொடக்கத்தில் இருந்து 2ம் கட்ட மெட்ரோ ரூட்களில் மெட்ரோ சேவை படிப்படியாகத் தொடங்கும் எனத் தெரிகிறது. 2ம் கட்ட மெட்ரோ முழுமையாக பயன்பாட்டிற்கு வந்தால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications