Vande Bharat: சென்னை டூ நெல்லை வந்தே பாரத்.. பயணிகள் நீண்ட நாள் கனவு நிறைவேறிடுச்சு.. இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே
சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயில் இனிமேல் கூடுதலாக ஒரு ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான விருதாச்சலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். நெல்லைக்கு இரவு 10.30 மணிக்கு இந்த ரயில் வந்து சேரும்.

வந்தே பாரத் ரயில்
சென்னையில் இருந்து நெல்லைக்கு சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவு உள்ள நிலையில், இந்த ரூட்டில் பிற ரயில்கள் சராசரியாக 10 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்தில் சென்னையில் இருந்து நெல்லை வந்தடைகிறது. இதனால் பயணிகளின் பயண நேரம் 2 மணி நேரத்திற்கு மேல் மிச்சமாகிறது.
இதனால், இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த ரயில்களில் தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடிகிறது. அதுவும் வார இறுதி நாட்களில் டிக்கெட் அவ்வளவு எளிதாக கிடைப்பது இல்லை. அந்த அளவுக்கு வந்தே பாரத் ரயில்களுக்கு தற்போது பயணிகள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.
விருத்தாசலத்திலும் நின்று செல்ல அனுமதி
இந்த நிலையில், சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலை விருதாசலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் இந்த கோரிக்கையை ஏற்று, விருதாசலத்தில் சென்னை எழும்பூர் - நெல்லை வந்தே பாரத் ரயில் நின்று செல்ல அனுமதி அளித்துள்ளது ரயில்வே அமைச்சகம். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் திருச்சிக்கு இடையே
விழுப்புரத்திற்கு அடுத்து நேராக திருச்சியில்தான் வந்தே பாரத் ரயிலுக்கு ஸ்டாப் இருந்த நிலையில், தற்போது விருத்தாசலத்திலும் நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது சுற்றுவட்டாரத்தில் உள்ள பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், பல்வேறு காரணங்களுக்காக சென்னை வந்து செல்லும் வியாபாரிகள் குறுகிய நேரத்தில் சென்னை செல்ல முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
8 வந்தே பாரத் ரயில்கள்
வந்தே பாரத் ரயில்களைப் பொறுத்தவரை முழுவதும் ஏசி வசதி கொண்டதாகும். தானியங்கி கதவுகள், விசாலமான ஜன்னல் கண்ணாடிகள், வைஃபை வசதி, சொகுசான இருக்கைகள், அடுத்து வரும் ரயில் நிலையம் பற்றிய முன்னறிவிப்பு, சிசிடிவி கேமராக்கள், பயோ டாய்லட்டுகள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
தமிழகத்தில் தற்போது சென்னை - நாகர்கோவில், சென்னை - கோவை, சென்னை - மைசூரு, மதுரை - பெங்களூர், சென்னை - விஜயவாடா உள்ளிட்ட வழித்தடங்களில் மொத்தம் 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் மொத்தம் 164 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications