சென்னை டூ நெல்லை வந்தே பாரத்.. இன்று முதல் திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் பயணிகள் சேவை.. மக்கள் குஷி
சென்னை: தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான நெல்லை - சென்னை வந்தே பாரத்தின் ரயில் சேவை இன்று முதல் துவங்கி உள்ளது.. இதையடுத்து பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்துள்ளனர்.
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து அறிமுகப்படுத்தி வைத்தார். நெல்லை உள்பட நாடு முழுவதும் 9 நகரங்களுக்கு வந்தே வாரத்தில் சேவை புதிதாக அறிமுகப்படுத்தி வைத்தார் பிரதமர் மோடி.

தமிழிசை: இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன், நெல்லை தொகுதி திமுக எம்பி ஞான திரவியம், தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்துடன், நெல்லையிலிருந்து வந்தே பாரத் ரயிலில் ஏறி பயணித்தனர்.
முதல் நாள் துவக்க விழா என்பதால் ரயில்வே ஊழியர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு, ஸ்பெஷல் பாஸ் வழங்கப்பட்டு, வந்தே பாரத் ரயிலில் பயணிக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.. அதாவது, கட்டணமின்றி இவர்கள் பயணித்திருந்தார்கள்.. இதற்காகவே, முன்கூட்டியே இவர்களுக்கு அனுமதி தரப்பட்டிருந்தது.. துவக்க விழா என்பதால், ரயிலும் ஜொலிஜொலித்து காணப்பட்டது..
குழந்தைகள்: குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவருமே திரண்டு வந்து இந்த ரயிலை ஆர்வத்துடன் கண்டுகளித்தார்கள். அதிநவீன வசதிகள் மற்றும் குறுகிய நேர பயணம் இந்த இரண்டும்தான் நெல்லை வந்தே பாரத் ரயிலின் ஸ்பெஷலாக பார்க்கப்பட்டு வருகிறது..
செவ்வாய்கிழமை தவிர மற்ற 6 நாட்களில் நாள்தோறும் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பி பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை சென்றடையும் வகையிலும் மறு மார்க்கமாக சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு கிளம்பி நெல்லைக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடையும் வகையிலும் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.
சாதாரண ஏசி: அதுமட்டுமல்லாமல், சாதாரண ஏசி இருக்கைக்கு உணவு கட்டணம் முன்பதிவு கட்டணம் ஜிஎஸ்டி உட்பட 1610 ரூபாய் என்றும், எக்ஸ்கியூட்டிவ் கேர் சர் பெட்டியில் பயணம் செய்வதற்கு உணவு கட்டணம் ஜிஎஸ்டி முன் பதிவு கட்டணம் ரூபாய் 3005 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் பயணிகளின் ரயில் சேவை துவங்க உள்ளது.
நேற்று திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள பிட்லைன் மையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன... எனவே, பயணிகளுடன் இன்று காலை 6:00 மணிக்கு புறப்பட்டுள்ள ரயில், சென்னை சென்று அங்கிருந்து புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு மறுபடியும் திருநெல்வேலியை வந்தடைகிறது... மொத்தம் 8 பெட்டிகள் மட்டுமே இருப்பதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் வடபுறம் உள்ள புதிய நுழைவு வாசலில் இருந்து ரயில் புறப்படுகிறது என்று ரயில்வே நிலைய மேலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
பயங்கர எதிர்பார்ப்பு: முழு ஏசி நவீன இருக்கைகள், கேமராக்கள், மாற்றுத்திளனாளிகள் குழந்தைகளுக்கான வசதிகள், செல்போன் சார்ஜிங் என பல்வேறு வசதிகள் உள்ளதால், இந்த ரயிலின் எதிர்பார்ப்பு எகிறியபடியே உள்ளன.












Click it and Unblock the Notifications