மோனிகாவுக்கு ஹேப்பி பர்த்டே.. சபாஷ் போலீஸ்.. அடைமழையிலும் அசர வைத்த "மனிதம்"
ஒரு வயது குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடினர் சென்னை போலீசார்
சென்னை: ஒரு வயது பெண் குழந்தையின் பிறந்த நாளை, சென்னை போலீசார் சிறப்பாக கொண்டாடி அனைவரையும் திக்குமுக்காட வைத்துவிட்டனர்.. நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் இப்படி ஒரு சம்பவம் சென்னையில்தான் நடந்துள்ளது.
நாளுக்கு நாள் மனித மனங்கள் மரத்துவிட்டதாகவும், மனித நேயம் குறைந்துவிட்டதாகவும் செய்திகள் நிறைய வருவதுண்டு. ஆனால், அன்பும் பாசமும் முழுமையாக நம்மைவிட்டு போய்விடவில்லை என்பதற்கும் நிறைய சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
குறிப்பாக, இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போதெல்லாம், மனிதனின் கருணை உள்ளங்கள் வெளிப்பட்டு விடுகின்றன.. அந்த வகையில் இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அதுவும் சென்னையில் நடந்துள்ளது.

பாதிப்பு
கடந்த ஒரு வாரமாகவே பெய்த மழையில் சென்னை பாதிப்புக்கு உள்ளானது.. இந்த மழையை சென்னைவாசிகள் எதிர்பார்க்கவே இல்லை.. இதனால் பல்வேறு இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, 3 நாட்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு, கைக்குழந்தைகளுடன் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு செல்வதும் நடந்தது.

அதிகாரிகள்
அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள்அனைவரும் சேர்ந்து பாதிப்புக்கு உள்ளான மக்களை மீட்டு, முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர்.. இதில் போலீசாரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.. அந்த வகையில், துரைப்பாக்கம் பகுதியிலும் கனமழை பெய்தது.. இதனால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, அந்த பகுதி மக்கள் தங்குவதற்காகவே, பெருங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசு நிவாரண முகாம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

முகாம்
இதில் பலரும் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.. நேற்றைய தினமும், பொதுமக்களின் தேவைகள் குறித்து துரைப்பாக்கம் போலீசார், நிவாரண முகாமை பார்வையிட்டனர்... அப்போது முகாமில் உள்ள மோனிகா என்ற ஒரு வயது பெண் குழந்தைக்கு, பிறந்தநாள் என்பது காவல் உதவி ஆய்வாளரான ஜெய்கணேஷிற்கு தெரியவந்தது. குழந்தையின் பெற்றோர் பெயர் லட்சுமணன் - இந்திரா.. இவர்கள் தங்களின் குழந்தையின் முதல் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து வைத்திருந்தனர்..
Recommended Video

வருத்தம்
திடீரென மழை, புயல் என வரவும், அதிழம் முகாமில் தங்க வைக்கப்படவும், பிறந்த நாளை கொண்டாட முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தத்திலும் இருந்தனர்.. இதனையடுத்து ஜெய்கணேஷ் உட்பட நவரத்தினம், சூர்யசந்திரன், முத்துகிருஷ்ணன் பெண் போலீஸ் பாரதி அனைவரும் ஒன்று சேர்ந்து, பெண் குழந்தை மோனிகாவுக்கு புது டிரஸ், பலூன், கேக், சாக்லேட்களை வாங்கி கொடுத்தனர்.

கொண்டாட்டம்
பிறகு, முகாமில் உள்ள அனைவரோடும் சேர்ந்து போலீசார் குழந்தை மோனிகாவின் பிறந்தநாளை, உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.. தங்களது வீடு மற்றும் உடைமைகளை விட்டு, அரசு நிவாரண முகாமில் தங்கித் தவித்துக் கொண்டிருந்த மக்கள், மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டம் உதவியாக இருந்தது என்றுகூட சொல்லலாம். முகாமில் இருந்த அத்தனை பேரும் போலீசாருக்கு நன்றியை சொன்னார்கள்.

மனிதம்
நேற்றைய தினம்தான் சென்னையில் புயல் அடித்தது.. அதன் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற கலக்கம் மக்களிடம் காலையில் இருந்தே எழுந்தது.. ஒருஇடத்தில் நிற்ககூட நேரம் இல்லாத அளவுக்கு போலீசாரும் பரபரப்பில் பம்பரமாய் நேற்று இயங்கி வந்தனர்.. இடைவிடாத பணிகள் அத்தனை இருந்தாலும்கூட, ஒரு வயது குழந்தையை மகிழ்விக்க, தங்களால் இயன்றளவு மனிதநேயத்தை வெளிப்படுத்தி போலீசார் எடுத்து கொண்ட இந்த முயற்சி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications