சென்னையில் போக்குவரத்து மாற்றம் .. எந்த சாலையில் என்ன பிரச்சனை.. போலீஸ் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையில் பெரும்பாலான சாலைகள் மற்றும் சுரங்க பாதைகளில் மழை நீரை அதிக அளவில் தேங்கி உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நேற்றிரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கிக் கிடக்கின்றது. தாழ்வான இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரால் வாகனங்களை இயக்குவது இயலாத காரியாமாக உள்ளது.
சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மாம்பலத்திலிருந்து தியாகராய நகருக்கு செல்லக்கூடிய துரைசாமி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதைகள்
வடசென்னையில் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால் அவ்வழியாகவும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. இதுதவிர சேத்துபட்டு - பூந்தமல்லி சாலையை இணைக்கும் சுரங்கப்பாதையும் மழைநீரால் மூழ்கி உள்ளது. சுரங்கப்பாதைகள் என்றில்லை. பல பாதைகளில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. வெள்ள நீர் வடிவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்கிற நிலை உள்ளது

சென்னை போக்குவரத்து
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "பருவமழையின் சீற்றத்தால் சென்னை பெருநகரின் பெரும்பாலான பகுதிகளில் அதிகமான மழைபொழிவு நேற்று இரவிலிருந்து தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பெரும்பாலான சாலைகள் மற்றும் சுரங்க பாதைகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

சுரங்கபாதைகள்
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை பெருநகர மாநகராட்சியினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சாலைகளில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சுரங்க பாதைகள்:
1. ஈ.வி.ஆர் சாலை, கங்குரெட்டி சுரங்கபாதை
2 துரைசாமி சுரங்கபாதை
3. கொரட்டூர் சுரங்க பாதை

ஈ.வி.ஆர் சாலை
ஈ.வி.ஆர் சாலையில் காந்தி இர்வின் பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஈ.வி.கே சம்பத் சாலையில் வேப்பேரி காவல் நிலையம் நோக்கி திருப்பி
விடப்பட்டுள்ளது, மற்றும் சில பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் சூழ்நிலைக்கேற்ப திருப்பி விடப்படும்

எங்க மரம் விழுந்தது
சாலையோர மரம் விழுந்த பகுதிகள்:
1. சித்தரஞ்சன் சாலை (ஆழ்வார்பேட்டை)
2. தணிகாசலம் ரோடு(இரண்டு மரங்கள்) (தியாகராய நகர்)
3. கச்சேரி ரோடு (மயிலாப்பூர்)
மேற்கண்ட பகுதிகளில் விழுந்த மரங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன. பெரு மழையின் காரணமாக பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து மிதமான வேகத்தில் செல்கின்றது. வெளியில் வரும் வாகன ஓட்டிகள் பெரும் தாக்கத்தை கவனித்து தங்கள் பயணத்தை திட்டமிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications