சென்னை காவல்துறையின் ஆபரேஷன் 'DARE'.. அதிரடியாக களமிறங்கிய போலீசார்.. ஒரே நேரத்தில் 537 இடங்களில்!
சென்னை : சென்னையில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்க DARE என்ற பெயரில் ஸ்பெஷல் ஆபரேஷனை மேற்கொண்டு வருகிறது சென்னை மாநகர காவல்துறை.
தலைநகர் சென்னையில் குற்றங்களை குறைக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும், பழைய குற்றவாளிகளை கண்காணித்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், DARE ஆபரேஷனின் படி நேற்று இரவு சென்னை பெருநகர் முழுவதும் கடுமையான அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டன. இதேபோல, இனி அவ்வப்போது ரெய்டுகள் நடைபெறும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆபரேஷன் 'DARE'
சென்னையில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா சென்னை நகரமாக மாற்ற Drive Against Rowdy Elements (DARE) என்ற பெயரில் சிறப்பு ஆபரேஷன் மேற்கொண்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகர காவல்துறை எடுத்து வருகிறது. சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ள நபர்களுக்கு எதிரான ஒரு சிறப்பு தணிக்கையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

கிரைம் ஹிஸ்டரி குற்றவாளிகள்
சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் கொலை முயற்சி, இரண்டுக்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு சோதனையை போலீசார் மேற்கொண்டனர். இந்தச் சோதனையில், திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்த 490 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கண்காணித்தும், நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.

திருந்தி வாழ்வதாக
மேலும், 20 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை 2,255 குற்றவாளிகளிடம் இருந்து நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 207 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதிரடி ரெய்டு
மேலும், சென்னை பெருநகரில் உள்ள 537 லாட்ஜுகள், மேன்ஷன்கள் என தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனைகள் மேற்கொண்டனர். இந்த சோதனையில், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதைப் பொருட்கள் வைத்துள்ளனரா என்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

திடீர் சோதனை
நேற்று இரவு சென்னையிலுள்ள முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளில் தற்காலிக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு, 5,603 இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் மற்றும் அவற்றில் பயணித்த நபர்கள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், மது போதையில் வாகனம் ஓட்டியவர்கள், விதிமீறல் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டியது தொடர்பாக 89 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்கர் ஜிவால் எச்சரிக்கை
சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு வருவதால், குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி நபர்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும், குற்றங்கள் தடுக்கப்ப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications