வீடு வீடாக நோட்டீஸ்.. முன்னறிவிப்பின்றி உயர்ந்த சொத்து வரி.. கதறிய மக்கள்.. வாடகையும் உயரும்!
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர். அண்ணா நகர், வேளச்சேரி, நங்கநல்லூர், கோயம்பேடு, அடையாறு, மாதவரம் மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகப்பேரில் வசிக்கும் ஒருவருக்கு அரை ஆண்டிற்கான சொத்து வரி ₹13,000-லிருந்து திடீரென ₹63,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காரப்பாக்கத்தில் 1,600 சதுர அடி வீட்டின் வரி ₹895-லிருந்து ₹1,835 ஆக அதிகரித்துள்ளது.

கட்டிட அளவில், நிலத்தின் பரப்பளவில் முறையான மாற்றங்கள் எதுவுமில்லாத நிலையிலும் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேற்கு மாம்பலத்தை சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2022-ல் 90% வரி உயர்த்தப்பட்டது. இப்போது 1,400 சதுர அடி வீட்டிற்கு ₹3,500 வரை செலுத்தச் சொல்கிறார்கள். எந்த மாற்றமும் இல்லாதபோது எப்படி மறுமதிப்பீடு செய்தார்கள்? எனக் கேள்வி எழுப்புகிறார்.
கிண்டியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், 2021-ல் கூடுதல் கட்டிடம் கட்டியபோது வரி ₹1,000-லிருந்து ₹2,125 ஆக உயர்ந்தது. ஆனால் இப்போது எந்த மாற்றமும் செய்யாத நிலையிலும் ₹4,100 ஆக மாற்றப்பட்டுள்ளது, என்கிறார். இதனால் பல இடங்களில் வரி வசூலிப்பாளர்களே அதிகாரப்பூர்வ விளக்கம் வரும் வரை வரியைச் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
பல குடியிருப்போர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் பேசுகையில், வரி உயர்வு 30% முதல் 300% வரை உள்ளது. அதோடு, நிலுவைத் தொகையையும் சேர்த்துச் செலுத்தச் சொல்கிறார்கள் எனக் குற்றம்சாட்டியுள்ளார். ஆண்டின் முதல் பாதிக்கான வரியை ஏற்கெனவே செலுத்திவிட்ட நிலையில், இந்த கூடுதல் தொகையை நிலுவை என நிலுவைப் பட்டியலில் சேர்த்திருப்பது மக்களை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், பல கட்டிடங்களில் குறைந்த பரப்பளவே கணக்கில் காட்டப்பட்டுள்ளது. 2019-ல் உலக வங்கி உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் 3 லட்சம் கட்டிடங்களில் விதமீறல்கள் கண்டறியப்பட்டன. தனியார் நிறுவனத்தின் ஜி.ஐ.எஸ் (GIS) மேப்பிங், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் அரசுத் தரவுகளின் அடிப்படையில் 14.25 லட்சம் சொத்துகளில் 3.5 லட்சம் சொத்துகள் குறைந்த மதிப்பீடு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதில் 3.04 லட்சம் குடியிருப்பு வீடுகள். இதில் 95% வீடுகளுக்கு உயர்வு ₹5,000-க்கும் குறைவாகவே உள்ளது. ஆட்சேபனை உள்ளவர்கள் மண்டல துணை ஆணையர்களிடம் மனு அளிக்கலாம்.. அவை ஒரு மாதத்திற்குள் பரிசீலிக்கப்படும்.. என்றார். மேலும் கொரோனா, தேர்தல்கள் மற்றும் கொள்கை முடிவுகளால் முன்னறிவிப்பு தர முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வரி மறுமதிப்பீடு குறித்து மாநகராட்சி மன்றத்திலோ அல்லது எங்களிடத்திலோ கலந்தாலோசிக்கப்படவில்லை. ஆணையரே இதனை நேரடியாகச் செயல்படுத்தியுள்ளார். அரசு நிதி வழங்கியிருந்தால் மக்கள் மீது இந்த வரிச்சுமை விழுந்திருக்காது, எனத் தெரிவித்துள்ளார்.
சட்டப்படி எந்தவொரு வரி மாற்றத்திற்கும் முன்னறிவிப்பு வழங்கி, வாடகைதாரர்களின் விளக்கத்தைக் கேட்ட பிறகே புதிய வரி விதிக்கப்பட வேண்டும். ஆனால், ஜி.ஐ.எஸ் தொழில்நுட்பத்தைச் சாட்டி திடீரென வரியை உயர்த்தி அறிவிப்பது வெளிப்படைத்தன்மையற்ற செயல். 3 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மறுமதிப்பீட்டு நடவடிக்கையை உடனடியாக நிறுத்திவைத்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
சொத்து வரி உயர்வால் மெட்ரோவாட்டர் (குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல்) வரியும் உயரும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இதனால் வீட்டு வாடகை தானாக உயரும். சொத்து வரியின் ஆண்டு வாடகை மதிப்பில் ARV 7% தொகையை மெட்ரோவாட்டர் வரியாக வசூலிக்கிறது. சொத்து வரி மதிப்பிடப்படும்போதே அதில் 23% மாநகராட்சிக்கும், 7% குடிநீர் வாரியத்திற்கும் பிரித்து வழங்கப்படுகிறது.
இதனால் மாதவரம், பெருங்குடி, ஓ.எம்.ஆர் போன்ற மெட்ரோவாட்டர் இணைப்பே இல்லாத விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் வரி உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல பகுதியில் கழிவுநீர் இணைப்பு இல்லை என்றாலும், சொத்து வரி உயர்த்தப்பட்டதால் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியும் தானாகவே உயர்ந்துவிடும், இதனால் வாடகை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
