டாஸ்மாக் கடைகள் 25.. ஒரகடத்தில் ரூ.1.63 கோடி கொள்ளை! காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே டாஸ்மாக் கடைகளில் வசூலான ரூ.1.63 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 25 கடைகளில் வசூலான பணத்தை எடுத்துச் சென்ற காரை, டிரைவரின் கவனத்தை திசைதிருப்பி மர்ம கும்பல் கடத்தியுள்ளது. பிறுகு காரை சாலையோரம் நிறுத்திவிட்டு பணத்துடன் தப்பியுள்ளது. டாஸ்மாக் கடைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இப்போது டாஸ்மாக் வசூல் பணத்துக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் பணத்தை தனியார் வங்கி ஏஜெண்டுகள் வசூல் செய்வது வழக்கம். அந்த வகையில், நவம்பர் 10-ம் தேதி இரவு தனியார் வங்கி காசாளர் தாஸ் (52), டிரைவர் ஹபீப் ரஹ்மான் ஆகியோர் வெள்ளை நிற ஸ்விஃப்ட் காரில் பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

TASMAC Oragadam Kancheepuram Crime

ஒரகடம் டாஸ்மாக்

அன்றைய தினம் மட்டும் 25 டாஸ்மாக் கடைகளில் பணம் வசூல் செய்திருக்கிறார்கள்.. அந்தப் பணம் மொத்தமும் காரில் வைக்கப்பட்டிருந்தது.. தொடர்ந்து, ஒரகடம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றிருக்கிறார்கள்.. இரவு சுமார் 9.40 மணியளவில் தாஸ் பணம் வசூலிப்பதற்காக கடைக்குள் சென்றுள்ளார். இதனால் டிரைவர் மட்டும் காரில் இருந்துள்ளார்.

அப்போது ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 3 பேர், காரின் அருகே சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டும் பைக்கிலிருந்து இறங்கிய நிலையில், மற்ற 2 பேரும் காரின் பின்புறத்தில் மோதுவது போல் சென்றார்களாம்.. .

இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ஹபீப் ரஹ்மான், காரைவிட்டு இறங்கி பைக்கில் வந்தவர்களை துரத்திக்கொண்டு பின்னாடியே சென்றுள்ளார். அப்போது காரின் சாவி உள்ளேயே இருந்துள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பைக்கிலிருந்து இறங்கி நின்ற நபர், பணம் வைத்திருந்த காரை வேகமாக ஓட்டி சென்று விட்டார்.. டிரைவரின் கவனத்தைத் திசைதிருப்பி, திட்டமிட்டு இந்த சம்பவம் நடத்தப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

காரை விட்டுவிட்டு பணத்துடன் ஓட்டம்

காரை கடத்திச் சென்றவர்கள், படப்பை அருகே காரணித்தாங்கல் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி சாலையோரம் நிறுத்தியுள்ளனர். பிறகு காரில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அங்கு கைவிடப்பட்ட காரை போலீசார் மீட்டபோது, அதில் ரூ.12 லட்சம் பணம் மட்டுமே இருந்துள்ளது. மீதமுள்ள சுமார் ரூ.1.51 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லையா?

இந்த கொள்ளை சம்பவத்தில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், இவ்வளவு பெரிய தொகையை எடுத்துச் சென்ற காரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததுதான்.

வழக்கமாக டாஸ்மாக் பணத்தை எடுத்து செல்லும்போது பாதுகாப்பு வசதிகள் கொண்ட வாகனத்தை பயன்படுத்துவார்கள். அதில் 2 ஆயுதம் ஏந்திய செக்யூரிட்டிகளும் இருப்பார்கள்.. ஆனால் இந்த முறை வாடகை காரில் செக்யூரிட்டி ஒருத்தர்கூட இல்லாமல் பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தீபாவளி விடுமுறை காரணமாக தனியார் வங்கி பணம் வசூலிக்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் லீவில் இருந்ததால், பாதுகாவலர் இல்லாமல் வசூல் குழு அனுப்பப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுகுறித்து தனியார் வங்கி நிறுவனத்திடம் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது.

உள்விவகார நபர்களுக்கு தொடர்பா?

இவ்வளவு பெரிய தொகை எந்த நேரத்தில், எந்த வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது என்பது கொள்ளையர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பணம் வசூல் செய்யும் குழுவினருக்கு தெரிந்த நபர்கள் யாராவது இந்தச் சம்பவத்துக்கு பின்னால் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

காசாளர் தாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி கொண்டிருக்கிறார்கள்.

டைவர்ட் செய்த கும்பல் யார்

இதனிடையே, டாஸ்மாக் ஊழியர்கள் தாக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால், இது தவறான தகவல் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களைத் தாக்கி பணம் கொள்ளையடிக்கப்படவில்லை என்றும், டிரைவரின் கவனத்தைத் திசைதிருப்பி காரைக் கடத்தியதன் மூலமாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

மக்களின் கேள்வி என்ன?

ஆனால், இந்த சம்பவம் என்றில்லை.. சமீப காலமாகவே தமிழ்நாட்டில் மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. குடிபோதையில் ஏற்படும் தகராறுகள், வன்முறைச் சம்பவங்கள், குடும்ப பிரச்சனைகள் என பல்வேறு பாதிப்புகள் குறித்து மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வரும் நிலையில், டாஸ்மாக் வசூல் பணத்துக்கே உரிய பாதுகாப்பு இல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தினமும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் அரசு நிறுவனத்தின் பணத்தை எடுத்துச் செல்லும்போது, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டாமா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+