சென்னை புறநகர்.. கோவை உட்பட தமிழக சிவாலயங்களில் மகா சிவராத்திரி கோலாகலம்.. விடிய விடிய வழிபாடுகள்
சென்னை: தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.. கோவையில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது.. அதுபோவே, சென்னை மற்றும் புறநகரில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
சிவனுக்குரிய விரதங்களாக, மாத, நித்ய, யோக, மகா சிவராத்திரி என வருடமெல்லாம் பல சிவராத்திரிகள் இருந்தாலும், மகா சிவராத்திரி விரதம் சிறப்பானது என்பார்கள்..

மோட்சம்: மகா சிவராத்திரி நாளில், 3-ம் காலத்தில் ஈசனை வழிபட்டால் பாவங்கள் நம்மை விட்டுவிலகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது வழக்கமான ஐதீகமாக உள்ளது..
அந்த வகையில் இந்தியா முழுவதுமுள்ள சிவாலயங்களில் நேற்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மகா சிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சிவராத்திரி: கோவையை பொறுத்தவரை, ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் நேற்றைய தினமும் கோலாகலமாக துவங்கியது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதையொட்டி ஈஷா யோகா மையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதிலும் பிரபல பாடகர் சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி மனைவி சுதேஷ் தன்கர், திரிபுரா கவர்னர் இந்திர சேனா ரெட்டி, பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் எல் முருகன், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேக்றறனர்.
பிரம்மாண்டம்: கோவை ஈஷா யோகா மையத்தில் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பிரமாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுகுரியது, இந்த விழாவில் நான் கலந்து கொள்வதை என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.
அதேபோல, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். மயிலாப்பூர் கோயிலில் விளையாட்டு மைதானத்தில் சிவ தரிசனம், நாட்டிய சங்கம் என இன்றுகாலை வரை பல்வேறு நிகழ்வுகள், 4 கால பூஜைகள் நடைபெற்றன.
மயிலாப்பூர்: அதுபோலவே, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில் என அனைத்து சிவன் கோயில்களில் பக்தர்கள் கொண்டுவரும் பாலை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
சென்னையின் புறநகர்களில் ஈஞ்சம்பாக்கம் சுந்தரலிங்கேஸ்வரர் கோயில், வேளச்சேரி தண்டீஸ்வரர், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்ன.
கோயில்கள்: அனைத்து சிவாலயங்களிலும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், பக்தி சொற்பொழிவு, திருவிளக்கு பூஜை, மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், பட்டிமன்றமும் நடைபெற்றன.. எனவே, பக்தர்களின் வசதிக்காக, தமிழகமெங்கும் சிறப்பு பேருந்துகள் வசதி செய்யப்பட்டிருந்தன.. அதேபோல, காரைக்கால், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications