சென்னை-விழுப்புரம், கோவை-சேலம், சென்ட்ரல் -வேலூர்.. சென்னை மெட்ரோவின் கனவு திட்டம்
சென்னை: சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் மாதம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயணிகளை கையாண்டுள்ளது. மொத்த மெட்ரோ ரயில் வழித்தடமும் செயல்பாட்டிற்கு வந்தால், மிகப்பெரிய அளவில் இந்த எண்ணிக்கை உயரும். அதேபோல் பரங்கிமலை வேளச்சேரி-மயிலை-கடற்கரை வழித்தடத்தில் மெட்ரோ ஓடப்போவதால், அதன்பிறகு மிகப்பெரிய உயர்வும் இருக்கும். சென்னையில் கிட்டதட்ட மெட்ரோ மிகப்பெரிய லாபகரமாக மாறி உள்ளது. அடுத்ததாக தமிழ்நாட்டில் 3 பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்புக்கான வழித்தடங்களை சென்னை மெட்ரோ ஆராயத் தொடங்கி உள்ளது.
சென்னை மெட்ரோ லாபகரமாக நிறுவனமாக மாறப்போகிறது. இந்தியாவின் மற்ற நகரங்களை ஒப்பிடும் போது, சென்னையில் மெட்ரோ ரயிலுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. என்னதான்விமான நிலையம் வழியாக புறநகர் ரயில்கள் சென்றாலும், மெட்ரோ ரயில்களில் செல்வதை பலரும் விரும்புகிறார்கள். காலையில் வேலைக்கு செல்வதற்கு அதிகமானோர் மெட்ரோ ரயிலை பயன்படுத்துகிறார்கள். நியாயமான கட்டணம், நல்ல சேவை என்பதால் வரவேற்பு அதிகமாக உள்ளது.

ஒரு கோடி பயணிகள்
இதன் காரணமாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 1 கோடிக்கும் மேற்பட்ட பயணிகளைப் பதிவு செய்திருக்கிறது. இந்த வரவேற்பு சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட, 3ம் கட்ட, 4ம் கட்ட, ஐந்தாம் கட்ட வழித்தடங்களுக்கும் இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2028ல் சென்னை முழுக்க மெட்ரோ ரயில்கள்
2028ம் ஆண்டில் சென்னை முழுக்க மெட்ரோ ரயில்கள் ஓடிவிடும் என்பதால், அடுத்தகட்டமாக சென்னையை தாண்டி மற்ற நகரங்களில் பணிகளை மேற்கொள்ள சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளது. அதாவது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 3 பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்புகளை (ஆர்.ஆர்.டி.எஸ்.) ஆராயத் தொடங்கியிருக்கிறது.
பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு என்றால் என்ன
ஒரு ரயில் அதிவேகமாக மணிக்கு 160-200 கி.மீ. வேகத்தில் செல்லும். அரை மணிநேரத்தில் இருந்து 1 மணி நேர பயண நேரங்களில் நகரங்களுக்கு இடையேயான தூரங்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும். சாலைப் பயணத்தை விட மிக வேகமாக செல்ல முடியும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து நகரத்தின் மையப் பகுதிகளுக்கு விரைவாகச் செல்ல முடியும்.
விரைவு போக்குவரத்து
தற்போது, டெல்லியில் உள்ள நியூ அசோக்நகர் முதல் மீரட் தெற்கு நிலையம் வரையிலான நமோ பாரத் வழித்தடத்தின் 55 கி.மீ. தூரம் மட்டுமே அதிவேக சேவை இயக்கப்படுகிறது. இந்த பகுதி டெல்லி- காஜியாபாத்- மீரட் பிராந்திய விரைவு போக்குவரத்து வழித்தடத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களை அவற்றின் அண்டை பிராந்திய மையங்களுடன் இணைக்கும் பிராந்திய விரைவு போக்குவரத்து இணைப்புகளை வரையறுக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 3 சாத்தியக்கூறு ஆய்வுகளை தொடங்கி இருக்கிறது.
கோவை, சென்னை
அதன்படி, சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் இடையேயான 170 கி.மீ. நீள வழித்தடம், சென்னை - காஞ்சீபுரம் - வேலூர் இடையேயான 140 கி.மீ வழித்தடம், கோயம்புத்தூர் - திருப்பூர் - ஈரோடு - சேலம் இடையேயான 185 கி.மீ. நீள வழித்தடத்தில் பிராந்திய விரைவு போக்குவரத்து இணைப்புக்கான ஆய்வுகள் நடக்க உள்ளது. இந்தப்பணிக்கு பாலாஜி ரயில் பாதை அமைப்புகள் நிறுவனத்தை சாத்தியக்கூறு ஆய்வு ஆலோசகராக சென்னை மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆய்வு எப்படி
இவர்கள் விரைவில் கீழ்கட்ட வழித்தடத்தில் பிராந்திய விரைவு போக்குவரத்து பாதைக்கும் மாற்று வழிகள், நிலையங்கள், பணிமனை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தேர்வு செய்வார்கள். அதேபோல், தண்டவாளங்கள் தரையிலா?, உயர்த்தப்பட்ட பாதையா? அல்லது சுரங்கப்பாதையில் இயங்க வேண்டுமா? என்பதை தேர்வு செய்வார்கள். தேவைப்படும் நிலம், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் திட்டச் செலவு ஆகியவற்றை திட்டமிட்டு அறிக்கை கொடுப்பார்கள். அதன்பிறகு சாத்திய கூறுகள், லாப கணக்கீடுகள், திட்டத்தின் தேவை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து சென்னை மெட்ரோ முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.இந்த தகவல்களை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications