எமனாக வந்த பேருந்து.. சுக்குநூறான கனவு.. கணவன், குழந்தைகள் முன்பு துடிதுடித்து இறந்த சென்னை பெண்
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. மிகுந்த உற்சாகம், கொண்டாட்டத்துடன் மக்கள் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். சென்னையில் கணவன், 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெண், ஆம்னி பேருந்து மோதியதில் உறவுகள் கண் முன்னரே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் மொத்த தமிழகமும் பரபரப்பான நிலையில் இருக்கிறது. மக்கள் புத்தாடை, பட்டாசு, இனிப்பு வாங்குவதற்காக மார்கெட்களில் குவிந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அதையும் பொருட்படுத்தாமல் மக்கள் பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆம்னி பேருந்து - பைக் விபத்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 18 ஆம் தேதி முதல், அக்டோபர் 21 ஆம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை உள்ளது. இதனால் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு அதிகளவு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பேருந்து, ரயில், விமானம் அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலும் அதிகளவு உள்ளது. சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் பேருந்து மூலம் சுமார் 6.15 லட்சம் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
இன்றும் மக்கள் அதிகளவு பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். வடபழனி 100 அடி சாலையில் ஒரு கணவன் - மனைவி தங்களின் 2 குழந்தைகள் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியே ஒரு ஆம்னி பேருந்து சென்றுள்ளது. திடீரென எதிர்பாராத விதமாக அவர்களின் இருசக்கர வாகனத்தில் ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்தப் பெண் கணவன், குழந்தைகள் கண்முன்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் திவ்யா (வயது 33) என்றும் அவர்கள் அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. காயமடைந்த திவ்யாவின் கணவர், 2 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளை பறிமுதல் செய்து, பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன், குழந்தைகள் கண் முன்னரே சென்னை பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications