செஸ் ஒலிம்பியாட் மத்திய அரசு ஒத்துழைப்பு இல்லாமல் நடத்திருக்காது: வரவேற்புரையில் அமைச்சர் மெய்யநாதன்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒத்துழைப்பு இல்லாமல் செஸ் ஒலிம்பியாட் நடந்திருக்காது என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இன்று முதல் ஆகஸ்டு 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியுள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு சட்டை, வேட்டியுடன் கலந்துகொண்டுள்ளார். அதேபோல் தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், கார்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள், கொடி அணிவகுப்பு ஆகியவை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சதுரங்க கரை கொண்ட வேட்டி, சட்டையுடன் தமிழ் பாரம்பரிய முறைப்படி செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொண்டார். இதன்பின்னர் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து சிறப்புரையாற்றிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒத்துழைப்பு இல்லாமல் செஸ் ஒலிம்பியாட் நடந்திருக்காது. மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய சோதனையாக இருந்த கொரோனா பரவலுக்கு பின் இந்த மகத்தான நிகழ்ச்சி நடைபெறுகிறது. சர்வதேச அளவில் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடி படத்தை ஒலிம்பியாட் போஸ்டர்களில் தமிழக அரசு இடம்பெறச் செய்யவில்லை என்று பாஜகவினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால் திமுக நிர்வாகிகளோ, இது முதல்வர் உழைப்பால் நடக்கும் நிகழ்ச்சி என்பதால் மோடி படம் தேவையில்லை என்று கூறி வந்தனர். இந்த நிலையில், அமைச்சர் மெய்யநாதன் இவ்வாறு பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications