ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுவிக்க முதல்வரே விரும்பவில்லை - சீமான்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுவிக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுவிக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. அப்படியிருக்கும்போது புதிதாக வரும் ஆளுநர் ரவி ஒன்றும் செய்யமாட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யுமாறு பல தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. அவர்களது விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அரசமைப்பு ஆயமும், அடுத்து நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அரசமைப்பு ஆயமும் 'மாநில அரசுகள் பொது மன்னிப்பு வழங்கி சிறையாளிகளை விடுதலை செய்வதற்கு, தங்கு தடையற்ற அதிகாரத்தை அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்குகிறது' என்று தெரிவித்துள்ளன.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டபூர்வமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக எழுவர் விடுதலையில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த தமிழக ஆளுநர், அவர்களை விடுவிக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக கூறிவிட்டார். அதன் படி, எழுவர் விடுதலையில் ஆணை பிறப்பிக்க வேண்டுமென முதல்வர் முக ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு கடிதம் எழுதினார். முதல்வர் கடிதம் எழுதி ஒரு மாதம் ஆகும் நிலையில் ஏழுபேர் விடுதலையில் குடியரசுத் தலைவர் என்ன முடிவு எடுத்துள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அப்போது எதிர்கட்சித்தலைவராக திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தினார். கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக அமர்ந்துள்ளது. ஏழுபேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ள நிலையில் சில மாதங்களுக்குப் முன்பு பேசிய அமைச்சர் ரகுபதி, எழுவர் விடுதலையில் பல சட்டசிக்கல்கள் உள்ளது என்று கூறினார்.
ஏழுபேர் விடுதலையில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரை கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வை ஆராய அமைக்கப்பட்ட குழு நீதிமன்றத்திற்கு எதிராக உருவாக்கப்படவில்லை என்றும் விடுதலை செய்யக் கோரியவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்தநிலையில்தான் திமுக அரசை விமர்சித்து பேசி வருகிறார். பாரதியார் மற்றும் இமானுவேல் சேகர் ஆகியோர் நினைவு தினத்தையொட்டி, தனது இல்லத்தின் முன்பு அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்திய சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது திமுக ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்திக்கொண்டு போகிறது என்ற பெருமை எனக்கு வந்திருக்கிறது என்று கூறி அதிர வைத்தார்.
நாம் தமிழர் கட்சி என்ன சொல்லியிருக்கிறதோ, என்ன எழுதி அறிக்கை விடுக்கிறதோ அதையெல்லாம் பார்த்துதான் திமுக அரசு செயல்படுத்துகிறது. நான் பேசுவதற்கு எதையும் மிச்சம் வைத்துவிடக்கூடாது என்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்று கூறிய சீமான் அதில் எனக்கு மகிழ்ச்சிதான் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சீமான், நான் திமுகவில் தொடர்ந்து இருந்திருந்தால் அமைச்சராக கூட இப்போது ஆகியிருப்பேன். பிரபாகரனை சந்தித்த பிறகுதான் எனக்குள் ஒரு வெளிச்சம் பாய்ந்தது அதுதான் தமிழ் தேசியம் என்றார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுவிக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. அப்படியிருக்கும்போது புதிதாக வரும் ஆளுநர் ரவி ஒன்றும் செய்யமாட்டார் என்று தெரிவித்தார்.
ஆளுநரின் வேலை என்பது மாநிலங்களில் நடப்பதை உளவு பார்த்து மத்திய அரசுக்கு சொல்வது; தமிழ்நாட்டுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் அந்த வேலையை சரியாக செய்வார் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் சீமான்.
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்த அரசின் செயல்பாடுகளை பலமுறை விமர்சித்துள்ளார் சீமான். திமுக ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்திக்கொண்டு போகிறது என்றும் கூறி புதிய பரபரப்பை பற்ற வைத்துள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications