”வாஞ்சையொழுக அன்பு பாராட்டியவர்” தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: உடல்நலக் குறைவால் காலமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணனுக்கு முதலமைச்சர் மு.க.இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழறிஞரும், பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். 77 வயதாகும் இவர், அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார்.

இவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராசர், பாடலாசிரியர் கண்ணதாசன் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நெருங்கி பழகியவர். 1970களில் தொடங்கி தமிழ் மேடைகளில் நெல்லை கண்ணனின் குரல் ஒலித்து வந்தது. பாற்கடல் போல் தமிழ் மொழியில் புலமைப்பெற்றிருந்ததால் , அவரை பலர் தமிழ்க்கடல் என்று அழைத்து வந்தனர்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய இவர், அண்மைக் காலங்களில் திமுக ஆதரவு நிலை எடுத்திருந்தார். இதனிடையே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது திடீர் மறைவு தமிழ் இலக்கிய உலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கு அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மறைந்த தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், பிரபல பேச்சாளரும், தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவையறிந்து வருத்தமுற்றேன். கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய காமராசர் கதிர் விருது பெற்ற பெரியவர் நெல்லை கண்ணன் அவர்கள், விழா மேடையிலேயே என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போது நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன்.
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் வகையில், கடந்த 2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறையின் இளங்கோவடிகள் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இலக்கிய அறிவில் செறிந்த பழகுதற்கினிய நெல்லை கண்ணன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழுலகினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications