"அனைவரிடத்திலும் மாறாத அன்பு செலுத்தும் செய்யது ஹைதர் அலி சிஹாப்".. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர் அலி சிஹாப் மறைவுக்கு தமிழக முதல்வரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் கேரள மாநிலத் தலைவரும், நபிகள் நாயகத்தின் பரம்பரை வழிவந்தவருமான ஹைதர் அலி சிஹாப் தங்கள் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மறைந்தார்.

74 வயதில் மறைவு
இவரது மறைவுச் செய்தியால் கேரளாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் மிகுந்த துயரமுற்றிருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர் அலி சிஹாப் மறைவுக்கு தமிழக முதல்வரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், " இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர் அலி சிஹாப் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைவுக்கு இரங்கல்
இந்திய நாட்டின் மதநல்லிணக்கத்திற்கும், சிறுபான்மைச் சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கும் தொடர்ந்து பாடுபட்டு வந்த அவரது மறைவு பேரிழப்பாகும். அனைவரிடத்திலும் மாறாத அன்பு செலுத்தும் செய்யது ஹைதர் அலி சிஹாப் அவர்களை இழந்து வாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை இறுதி சடங்கு
ஹைதர் அலி சிஹாப் அவர்களுக்கு பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தில் மிக முக்கியமான அரசியல் தலைவரான ஹைதர் அலி சிஹாப் தங்களின் இறுதிச்சடங்கு கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பாணக்காட்டில் நாளை காலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications