கடமையும் பொறுப்பும் நிறைய உள்ளது.. குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பாராட்டு
சென்னை: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் பணிகள் என்பது உயர்ந்த அரசு பணிகள் என்பதை தாண்டி, அதற்கென ஒரு தனி பொறுப்பும் கடமையும் உள்ள பதவிகள் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டிற்கான இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 வெற்றியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின்
சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். புதிதாக பல்வேறு இந்திய குடிமைப் பணிகளுக்கு தேர்வாகி இருக்கும் இளம் திறமைசாலிகளே! உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

இந்தியாவின் மிகுந்த பெருமைக்குரிய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள உங்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களது தந்தையின் இடத்தில் இருந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
அகில இந்திய போட்டித் தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றது என்பது, உங்களது கடினமான உழைப்பையும், கூர்மையான அறிவையும், விடாமுயற்சியையும் எடுத்துக் காட்டுகிறது. சாதாரணமாக, யாருக்கும் இந்த வெற்றி கிடைத்து விடாது என்பதை என்னைவிட நீங்கள் நன்றாக அறிவீர்கள். லட்சக்கணக்கானவர்கள் தேர்வில் பங்கேற்றாலும், சிலரால் மட்டுமே வெற்றி பெற முடியும். அந்த விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரில் நீங்களும் ஒருவர் என்பதுதான் உங்களது முக்கியத்துவம்! உங்களது முகங்களை பார்க்கும் போது, கிராமப்புற முகங்களும் தென்படுகிறது. உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியாகவும் நீங்கள் இருக்கலாம். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.
உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது, இந்த இடத்துக்கு உங்களை உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எந்நாளும் மறக்காதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் பணிகள் என்பது உயர்ந்த அரசு பணிகள் என்பதை தாண்டி, அதற்கென ஒரு தனி பொறுப்பும் கடமையும் உள்ள பதவிகள் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எப்போதுமே உயர்ந்த பதவி என்பது அதை விட பன்மடங்கு கடமையையும் பொறுப்பையும் உள்ளடக்கியது என்பதுதான் உண்மை. இந்த நாட்டின் எளிய மக்கள், குறிப்பாக கிராமப் பகுதி மக்களின் வாழ்வானது, அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களினால்தான் மேம்பட வேண்டும்.
இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமான நாட்டில் இது மிக மிக முக்கியமானது. அதற்கு அரசு திட்டங்கள் முறையாக, அவர்களைச் சென்று அடைய வேண்டும். அது நடைபெற வேண்டும் என்றால், நாளைய தினம் முக்கிய பொறுப்புகளில் அமரப்போகும் உங்களைப் போன்ற சிறந்த அலுவலர்கள் திட்டங்களைக் கண்காணித்து செயல்படுத்திட வேண்டும்.
தமிழ்நாட்டில், மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்த இருக்கிறோம். உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில், தரவரிசைப்படுத்தப்பட்ட 146 நாடுகளில், இந்தியா 127-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதும் மிகவும் கவலைக்குரிய செய்தியாகும். இதனை நீக்குவதற்கான முயற்சியாகவும், இந்தத் திட்டத்தை திட்டமிட்டுள்ளோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications