யுஜிசியின் புதிய துணை வேந்தர் நியமன விதிகள்.. சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்த முதல்வர்!
சென்னை: யுஜிசி கொண்டு வந்த துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். ஏற்கனவே யுஜிசி அறிவிப்பு வெளியான போதே, சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தமிழ்நாடு எதிர்த்து போராடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், தற்போது தனித் தீர்மானம் கொண்டு வந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
நாட்டின் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல் குழு தொடர்பாக யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டிருந்தது. அதில், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது, தேடுதல் குழு தலைவராக ஆளுநர் பரிந்துரைக்கும் நபரும், உறுப்பினர்களாக யுஜிசி பரிந்துரைக்கும் நபரும் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுவரை மாநில அரசு பரிந்துரைக்கும் நபர் குழுவில் இடம்பெற்று வந்தார். அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டதாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிகள் வெளியான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், யுஜிசி இதுபோன்ற மாற்றங்களை கொண்டு வருவது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல், துணை வேந்தர்கள் நியமனங்களில் ஆளுநர்களுக்கு பரந்த கட்டுப்பாட்டை வழங்குவது மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்களும் இந்த பதவிகளை வகிக்க அனுமதிப்பது மாநில மற்றும் கூட்டாட்சி உரிமைகள் மீதான நேரடி தாக்குதலாகும். அதிகாரத்தை தன்வசம் குவிக்கவும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரத்தை குறைக்கவும் இந்த எதேச்சதிகார நடவடிக்கையை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது.
கல்வி என்பது பாஜக அரசின் ஆணைப்படு செயல்படும் ஆளுநர்கள் வசம் இல்லாமல்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வசம் இருக்க வேண்டும். சிறந்த உயர்கல்வி நிறுவனங்களை கொண்டு நாட்டிலேயே முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு, நமது கல்வி நிறுவனங்களின் சுயாட்சி பறிக்கப்படுவதை பார்த்து அமைதியாக இருக்காது. அதேபோல், கல்வி என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தில் பொது பட்டியலில் உள்ளது.
எனது யுஜிசி இந்த அறிவிப்பை ஒரு தலைபட்சமாக வெளியிடுவது அரசியலமைப்பிற்கு எதிரானது. இதனை தமிழ்நாடு சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்து போராடும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 4வது நாள் கூட்டம் தொடங்கியுள்ளது. இன்று, யுஜிசி-யின் துணை வேந்தர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
அப்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், புதிய விதிகள் பல்கலைக்கழகத்தை சிதைக்கும் காரியமாகவே இருக்கும். மாநில அரசின் பல்கலைக்கழகங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிப்பது கெடுநோக்கம் கொண்டது. யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். கல்வியையும் மக்களையும், எதிர்கால தலைமுறைக்காகவும் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications