விடுமுறை நாளில் சோகம்.. குட்டையில் மூழ்கி பலியான தோழிகள்.. நிதி உதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : ராசிபுரம் அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த அத்திபலகானூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஜனனி, ரத்னா ஸ்ரீ ஆகியோர் இன்று அப்பகுதியில் உள்ள மழைநீர் குட்டையில் குளிக்கச் சென்றபோது மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அப்பகுதியில் நாய் ஒன்று நீண்ட நேரமாக குறைத்துக் கொண்டு இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் கரையின் மேலே துப்பட்டா இருந்ததைக் கண்டு உள்ளே யாரோ மூழ்கி உள்ளதை அறிந்து ஊர் பொதுமக்கள் உதவியுடன் குட்டையில் மூழ்கிய மாணவிகளின் சடலங்களை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நீச்சல் பழகச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், "நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கட்டநாச்சம்பட்டி கிராமம், அத்திப்பழகானூரில் வசித்துவரும் கணேசன்-வெண்ணிலா தம்பதியினரின் மகள் க. ஜனனி (வயது 14) மற்றும் கண்ணன்-தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகள் க.ரச்சனா ஸ்ரீ (வயது 15) ஆகிய 8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இன்று பள்ளி விடுமுறை என்பதால் அருகிலுள்ள நத்தம் மான்குட்டையில் நீச்சல் பழகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
மகள்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மாணவிகளின் பெற்றோருக்கு தலா ரூபாய் இரண்டு லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications