தாயிற் சிறந்த கோவிலுமில்லை! தயாளு அம்மாளிடம் புத்தாண்டு வாழ்த்து பெற்ற முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி தாயார் தயாளு அம்மாளை நேரில் சந்தித்து அவரிடம் ஆசியும் வாழ்த்தும் பெற்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதேபோல் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கும் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெறுவதற்காக கட்சியின் முக்கிய பிரமுகர்களும், அதிகாரிகளும் அவரது செனடாப் சாலை இல்லத்தில் குவிந்திருந்தனர்.

ஆங்கில புத்தாண்டு
ஆங்கில புத்தாண்டு தினமான இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது அம்மாவை நேரில் சந்தித்து அவரிடம் ஆசிர்வாதமும், வாழ்த்தும் பெற்று மகிழ்ந்திருக்கிறார். வயது மூப்பு காரணமாக உடல் நலிவுற்ற நிலையில் தயாளு அம்மாள் கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கருணாநிதி நினைவிடத்திற்கும் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி இருந்தவரை
கருணாநிதி இருந்தவரை ஆங்கில புத்தாண்டு தினத்தன்று ஒட்டுமொத்த குடும்ப உறவுகளும் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சங்கமித்து கருணாநிதியிடம் வாழ்த்தும் அவர் கொடுக்கும் புது 10 ரூபாய் நோட்டுக்களையும் பெற்றுக் கொள்ளும். இதனிடையே அவர் மறைந்தது முதல் தயாளு அம்மாளை சந்தித்து குடும்ப உறவுகள் ஆசி பெற்றுச் செல்வது வழக்கமாக உள்ளது. இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெறுவதற்காக கட்சியின் முக்கிய பிரமுகர்களும், அதிகாரிகளும் அவரது செனடாப் சாலை இல்லத்தில் காலை முதலே குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகள்
இதேபோல் அமைச்சர்கள் பலரும் காலையிலேயே முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். கட்சிக்காரர்கள் கூட்டம் அலை மோதியதால் முதல்வர் இல்லம் அமைந்திருக்கும் ஆழ்வார்பேட்டை பகுதி பரபரப்பாக காணப்பட்டது. ஐ.எ.எஸ்., ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகள் பலரும் கைகளில் பூங்கொத்துடன் புத்தாண்டை ஒட்டி முதல்வரை சந்திக்க வந்திருந்தனர். இதேபோல் தொழிலதிபர்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்துக் கூறவும் வாழ்த்து பெறவும் முதலமைச்சரை சந்தித்தனர்.

தை பொங்கல்
ஆங்கில புத்தாண்டுக்கு அடுத்த படியாக தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முதல்வர் மிக உற்சாகமாக கொண்டாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு பேட்டியில் சொன்னது போல், ஜனவரி மாதம் வந்துவிட்டாலே பொங்கல், ஜல்லிக்கட்டு, புத்தக காட்சி என தமிழகம் விழாக்கோலம் பூண்டுவிடுகிறது.












Click it and Unblock the Notifications