காலை சிற்றுண்டி திட்டத்தை அவமதிக்கும் தலைப்பு! பிரபல தமிழ் நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
சென்னை: காலை சிற்றுண்டி திட்டத்தை அவமதிக்கும் வகையில் தலைப்பு சூட்டியிருந்த பிரபல தமிழ் நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்; பயிற்றிப் பல கல்வி தந்து, இந்தப்பாரை உயர்த்திட வேண்டும்" என்று பாடினார் பாரதியார்.

அதற்கேற்ப இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நாட்டிற்கே முன்னோடியாய், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில், ''மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது'' என அரசுப் பள்ளி மாணவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு தலைப்பு சூட்டப்பட்டிருக்கிறது. இதனால் கோபம் அடைந்த முதல்வர் ஸ்டாலின் இது குறித்து விடுத்துள்ள பதிவு வருமாறு;
''உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை. தினமனுவுக்கு எனது வன்மையான கண்டனங்கள்.''












Click it and Unblock the Notifications