கருணாநிதி பெயர் வைப்பு நிறுத்தம்.. பா.ஜ.க எதிர்ப்பால் பணிந்ததா திமுக அரசு? - அமைச்சர் சொன்ன சேதி!
சென்னை: திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும்
தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
கருணாநிதி பெயர் சூட்டப்படுவதை எதிர்த்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் அமைச்சர் நேரு இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை கூறியபடி அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் யார் தடுத்தாலும் அவர்கள் மீது வழக்குப் பாயும் என அமைச்சர் கே.என்.நேரு எச்சரித்துள்ளார்.
“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா.. சொத்து வரியை உயர்த்துனதே இதுக்குத்தான்”- ஒரே போடாக போட்ட அமைச்சர் நேரு!

கருணாநிதி பெயர்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டம் திருவாரூர். நாத்திகராக இருந்தாலும், பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓடவைத்தவர் கருணாநிதி. அதனாலேயே அவர் 'தேர் ஓட்டிய நாத்திகர்' என உடன்பிறப்புகளால் புகழப்படுவது வழக்கம்.
இதையொட்டி திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்ட வேண்டும் என திருவாரூர் நகரசபை தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து, விரைவில் பெயர் மாற்றப்படும் என தகவல் வெளியானது.

பாஜக ஆர்ப்பாட்டம்
திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயரை சூட்டக்கூடாது என வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் திருவாரூரில் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பா.ஜ.கவிற்கு பயங்கரமான கூட்டம் கூடியது. அக்கட்சியில் புதிதாக இணைந்த எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் தனது செல்வாக்கை காட்டுவதற்காக கூட்டத்தை திரட்டியதாக தகவல் வெளியானது. என்ன இருந்தாலும், கருணாநிதியின் கோட்டையான திருவாரூரில் பாஜக இந்தளவுக்கு கூட்டம் கூட்டியது அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பியது.

பெயர் மாற்றம் நிறுத்திவைப்பு
இந்நிலையில், இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள், திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைத்தால் அரசை இயங்க விட மாட்டோம் என அண்ணாமலை தெரிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு, திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதைக்கூட அறிந்துகொள்ளாமல் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம் அது இது என அரசியல் செய்கிறார் எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை அரசியல்
அரசை இயங்க விட மாட்டார்கள் என்றால் பா.ஜ.கவினர் எங்கள் கை, கால்களை கட்டிப்போட்டு விடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஏதாவது ஒரு விவகாரம் கையில் சிக்காதா என்று இவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு நபரும் அரசாங்கத்தை நிறுத்தி வைக்க முடியாது. அண்ணாமலை கூறியபடி அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் யார் தடுத்தாலும் அவர்கள் மீது வழக்குப் பாயும் என எச்சரித்தார்.

அரசு பணிந்ததா?
திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் நேரு கூறியிருப்பது தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திருவாரூரில் பாஜக பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருப்பதால் அரசு பின்வாங்கியுள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
கருணாநிதி பெயர் வைக்கும் இந்த தீர்மானம் முன்பே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், பா.ஜ.க அத்தனை பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தும் வரை ஏன் எந்த அமைச்சரோ, மக்கள் பிரதிநிதிகளோ வெளியில் தெரிவிக்கவில்லை என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.