அரசு ஊழியர்களுக்கு.. "இந்த" நாட்களில் சம்பளம் கிடையாதாமே.. கோட்டையில் இருந்து பறந்த உத்தரவு
அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து இறையன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
சென்னை: அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்து, தமிழக தலைமை நிலைய செயலாளர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்
தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற பிறகு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக அளிக்கப்பட்டு வந்தது... அரசு ஊழியர் உயிரிழந்த பிறகும்கூட, அவரது மனைவிக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டுதான் வந்தது...
இதனிடையே, ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சில நிதி சிக்கல் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003ம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஓய்வூதியம்
புதிய ஓய்வூதிய திட்டமானது, மாதமாதம் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு அரசு ஊழியர்கள் எதிர்த்து வருகின்றனர்... புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மறுபடியும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறார்கள்.

திட்டம்
இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த முறை திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது.. ஆனால், திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து 10 மாத காலம் ஆகியும், பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிடவில்லை. இதைதான் தற்போது எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து வருகின்றன..

திமுக அரசு
இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போகிறார்கள்... இதற்காக நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அரசு ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்
இந்த வேலைநிறுத்தத்தில் தமிழ்நாட்டில் 50 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், பணிக்கு வராமல் இப்படி வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை துறைவாரியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. 28, 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வராமல் போராட்டத்தில் கலந்துகொண்டால் அன்றைய தினம் சம்பளம் வழங்கப்படமாட்டாது என்று போக்குவரத்து துறை, மின்சார துறை அறிவித்துவிட்டன..

இறையன்பு
அந்த வகையில், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மார்ச் 28, 29 ஆகிய தேதியில் எந்த விதமான விடுப்பும் அனுமதிக்கப்பட மாட்டாது. விடுப்பு எடுத்தால் 10.30 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். அன்றைய தினம் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications