பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கோடையில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது.. தலைமை செயலாளர் அதிரடி
சென்னை: வெப்பஅலையின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் உள்பட எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுரை வழங்கி உள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடை காலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வேளையில் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதோடு, சில பள்ளிகளில் அடுத்த ஆண்டுக்கான 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பாடங்கள் முன்கூட்டியே நடத்தி படிக்க வைப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோடை விடுமுறையை மாணவ-மாணவிகள் கொண்டாட முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் தான் கோடை விடுமுறையில் எல்லா வகையான சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரை வழங்கி உள்ளார்.
தமிழ்நாட்டில் வெப்பஅலை பாதிப்பு உள்ளது. இதனால் மாணவ-மாணவிகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிவ்தாஸ் மீனா மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்திற்கான வெப்பஅலை குறித்த அறிவிக்கையில் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் , குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்ப பகுதிகளில் மார்ச் முதல் மே 2024 வரை அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்பஅலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் வடதமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை காட்டிலும் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே எனது தலைமையிலும் கூடுதல் தலைமை செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையிலும் பல்துறை அலுவலர்கள் மற்றும் ஆட்சியர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் எதிர்வரும் 16.05. 2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36- 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால், பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது.
வெப்பஅலையின் தாக்கத்திலும் சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications